ஹைதராபாத்: சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்ற உலகப் பூப்பந்து வெற்றியாளர் கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து (படம்), ஒலிம்பிக் வெற்றியாளர் கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். உலகப் பூப்பந்துப் போட்டியில் அவர் வெள்ளிப்பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறையாகும். இந்தியா திரும்பிய 23 வயது பி.வி. சிந்து நேற்று முன்தினம் ஹைதரா பாத்தில் செய்தியாளர் களிடம் பேசினார்.
"நானும் கரோலினா மரினும் நல்ல தோழிகள். ஆனால் களம் இறங்கிவிட்டால் வேறு விதமாக மாறி விடுவோம். அதன் பிறகு ஆட்டத்தின் மீதுதான் கவனம் இருக்கும். இறுதிச் சுற்று முடிந்ததும் அவர் என்னைக் கட்டித்தழுவியது மகிழ்ச்சி அளித்தது. உலக வெற்றியாளர் பட்டத்தை வெல்வதற்கு அடுத்த முறை இன்னும் கடுமையாக முயல்வேன். நிச்சயம் ஒருநாள் உலக வெற்றியாளர் ஆவேன்," என்று சிந்து தெரிவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டி களில் தங்கம் வெல்ல சிந்து இலக்கு கொண்டுள்ளார்.