திருமணத்திற்குப் பிறகு நடித்து வெளியான படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாக அமைந்ததால் விபரீதமான முடிவுக்கு வந்திருக்கிறார் சமந்தா. அதாவது 70 வயது பாட்டியாக நடிக்க விரும்பி ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சமந்தாவுக்கு 'மெர்சல்', 'இரும்புத்திரை' ஆகிய இரண்டு படங்களின் வெற்றி மகிழ்ச்சியைக் கொடுத்தது. தெலுங்கில் கிராமத்துப் பெண்ணாக நடித்து வெளிவந்த 'ரங்கஸ்தலம்' படமும் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் 'யூடர்ன்' படத்தில் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் இது தயாராகிறது.
சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய் சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ்' படங்களில் நடித்து வருகிறார். தற்போது தென்கொரியாவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற 'மிஸ் கிரேனி' என்ற படத்தின் மறுபதிப்பில் 70 வயது மூதாட்டியாக நடிக்க சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவறான முடிவு என்று அவருடைய நண்பர்கள் அவருக்கு எடுத்துக் கூறியும் தன்னுடைய திறமையின் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்களின் அறிவுரையைக் கேட்காமல் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் சமந்தா.