கீர்த்தி சுரேஷ், தான் நடிக்கும் படங்கள் முடிவடையும் நேரத்தில் தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினருக்குப் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது அவருடைய வழக்கமாகிவிட்டது. தற்பொழுது அவர் நடித்து முடித்திருக்கும் ஒரு படத்தின் முடிவில் படக் குழுவினருக்குப் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சண்டக்கோழி 2'. இதில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் நிறைவுபெற்றன.
அதனால் படக்குழுவில் இருந்த 150 பேருக்கும் தலா 1 கிராம் தங்கக் காசு வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விஷால் தயாரித்துள்ள இந்தப் படத்தை 'லைகா புரொடக் ஷன்ஸ்' வெளியிடுகிறது. அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஆயுதப் பூஜை அன்று இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு கீர்த்திக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கிறார்கள். 'யாத்ரா' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை மாகி ராகவ் இயக்குகிறார்.