காஜல் அகர்வால் கைவசம் 'பாரிஸ் பாரிஸ்' என்ற தமிழ்ப் படம் மட்டும் உள்ளது. புதிதாக இரு தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கேரளா சென்ற காஜல் அகர்வால் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு மோகன்லால், மம்முட்டியை மிகவும் பிடிக்கும். இவர்கள் தவிர துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரும் பிடித்தமான நடிகர்கள் பட்டியலில் உள்ளனர். மலையாளத் திரையில் திறமையான நடிகர்கள் உள்ளனர்.
தமிழில் நான் நடிக்கும் புதிய படமான 'பாரிஸ் பாரிஸ்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு இரண்டிலும் நடிக்க எனக்கு எந்தக் கஷ்டமும் கிடையாது. தமிழில் நிறைய பேருடன் நடித்துவிட்டேன். எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதை, கதாபாத்திரங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதுபோன்ற கதைகள் அமையவும் செய்கின்றன. "எனக்குப் பாடவும் நடனம் ஆடவும் வராது. எப்படியோ படங்களில் நடனம் ஆடிவிடுகிறேன். திரைத்துறையில் நான் முன்மாதிரியாகப் பின்பற்றுகிறவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முதன்மையானவர்கள்.
"மலையாளப் படங்களில் இதுவரை நடிக்கவில்லை. மலையாளத் திரையுலகிலும் எனது பங்களிப்பு இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நடிகர் மோகன்லால், மம்முட்டி ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நல்ல கதைகள் அமைந்தால் மலையாளத்திலும் நடிப்பேன்," என்று கூறினார் காஜல் அகர்வால். காஜல் அகர்வால் 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் மூலம் தமிழில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.