You are here

முகமாற்று அறுவை சிகிச்சை பெற்ற அமெரிக்கப் பெண்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் ஓர் இளம் பெண் பல்வேறு குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரது முகம் விகாரமாகிவிட்டது. அதைச் சரி செய்யும் பொருட்டு அண்மையில் அவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் அமெரிக் காவிலேயே ஆக இளவயதில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் என்ற பெயரை அவர் பெறுகிறார். கேத்தே ஸ்டப்பிள்பீல்ட் 18வது வயதில் தன்னைத் தானே தாடைக்கு அடியில் வேட்டை துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டார். தற்போது அவருக்கு 22 வயதாகிறது. இவரது கதை ‘த ஸ்டோரி ஆஃப் ஏ ஃபேஸ்’ என்ற தலைப்பில் ‘நேஷனல் ஜியோகிராபி’ செப்டம்பர் மாத இதழிலும் வெளியாகியுள்ளது.

ஸ்டப்பிள்பீல்ட் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சிஎன்என் வெளியிட்ட செய்தி தெரிவித்தது. அவருக்கு வயிற்றுக் கோளாறு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அந்த சமயத்தில் காதலனும் அவரைக் கைவிட்டு விட்டார். மேலும் திருவாட்டி ஸ்டப்பிள்பீல்ட் படித்த பள்ளியில் வேலை பார்த்த அவரது தாயாருக்கு வேலை பறிபோனது. எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே சமயத்தில் சந்தித்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியபோதிலும் முகத்தின் முன்நெற்றி, மூக்கு, வாய், தாடை பகுதிகள் சேதமடைந்தன. அவரது கண்கள் அப்படியே இருந்தாலும் பலத்த சேதமடைந்திருந்தது என்று மருத்துவர்கள் தெரிவித் திருந்ததாக சிஎன்என் செய்தி குறிப்பிட்டது.