மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் சிங்கப்பூர் போலிஸ் படையும் இரு நாட்களாக இணைந்து நடத்திய வேட்டையில் 2.8 கிலோகிராம் ஹெராயின், 257 கிராம் கஞ்சா மற்றும் 38 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டு உள்ளன. இவற் றின் சந்தை மதிப்பு $199,000 என மதிப்பிடப்படுகிறது. ஜூரோங் கேட்வே ரோடு அருகில் உள்ள பகுதியில் கடந்த புதன்கிழமை மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தபோது இரு சந்தேக நபர்களை அவர்கள் கண் டனர். அந்த இருவரும் டாக்ஸி நிறுத்தம் ஒன்றில் சந்தித்துப் பேசிய பின்னர் வெவ்வேறு வழியாகச் சென்றனர். பின்னர் அதே பகுதியில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
முதல் சந்தேக நபரான 52 வயது சிங்கப்பூர் ஆடவரின் தோள் பையில் 470 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. இரண்டாவது நபரான 24 வயது மலேசியப் பெண் ணிடமிருந்து $2,800 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அதே நாளில் அங் மோ கியோ ஸ்திரீட் 61 பகுதியில் போதைப் புழங்கி ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வயது 57 என்றும் அவர் சிங்கப்பூர் ஆடவர் என்றும் பின்னர் தெரிய வந்தது.