ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ரியாவ் மாநிலத்தில் 121 இடங் களில் தீப்பற்றி எரிவது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தீத்தடுப்புப் பணிக்கு பொறுப்பேற்றுள்ள தளபதி ஒருவர் புதிய உத்தரவு ஒன்றை பிறப் பித்துள்ளார். அங்கு நிலத்தை சுத்தப்படுத்த சட்டவிரோதமாக தீ மூட்டுவோரை பார்த்தால் கண்டதும் சுட அதிகாரி களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்தோனீசியாவில் காட்டுத் தீ வேகமாகப் பரவுவதால் பல இடங்களில் புகைமூட்டம் அதி கரித்துள்ள நிலையில் ரியாவ் மாநிலத்திற்கான நிலம் மற்றும் காட்டுத் தீ தடுப்பு பணிக் குழு வின் தளபதியான ஜெனரல் சோனி அப்ரியாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ரியாவ் மாநிலத்தில் 22 இடங்களில் தீப்பற்றி எரிவது துணைக்கோளப் படங்கள் மூலம் கடந்த புதன்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது. மறுநாள் தீப்பற்றி எரியும் இடங்கள் 121 ஆக உயர்ந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சுமார் 99 விழுக்காடு காட்டுத் தீ ரியாவ் மாநிலத்தில் பரவு வதற்கு பொறுப்பில்லாத சிலரின் வேண்டுமென்றே செய்யும் செயல்தான் காரணம் என்று திரு அப்ரியாண்டோ கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. ஆகவே ரியாவ் மாநிலத்தில் வேண்டுமென்றே தீ மூட்டுவோரை கண்டதும் சுட ராணுவ அதிகாரி களுக்கு தான் உத்தரவு பிறப்பித் திருப்பதாகவும் அவர் கூறினார்.
உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அதுகுறித்து போலிஸ் படைத் தலைவர் ஜெனரல் நன்டாங்குடன் கலந்து ஆலோசித்ததாகவும் திரு அப்ரியாண்டோ கூறினார். அந்த உத்தரவை அமல்படுத்த ஒவ்வொரு ராணுவப் பகுதியிலும் ராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப் பட்டிருப்பர் என்றும் அவர் சொன்னார்.
இந்தோனீசியாவின் ரியாவ் மாநிலத்தில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க ராணுவ வீரர் ஒருவர் சிரமப்படுகிறார். ரியாவ் மற்றும் சுமத்ராவில் பல இடங்கள் தீப்பற்றி எரிகின்றது. இம்மாதத்தில் வறட்சியான பருவநிலை நீடிப் பதால் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
படம்: ஏஎஃப்பி