கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மாலிவுட் என்று இந்தியப் படவுலகில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நாயகிகள் பலரும் முன்னணி நாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவதாக அவ்வப்போது ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. இப்படி திரைப்படங்களில் நடிப்பது, விளம்பரங் களில் நடிப்பது என்று சம்பளத்தைக் குவிக்கும் நாயகிகளின் சொத்துப் பட்டியலில் ஆகப் பெரிய கோடீஸ்வரியாக தீபிகா படுகோன் முதலிடத்தில் உள்ளார்.
இந்திப் பட உலகில் அதிகம் சொத்து சேர்த்துள்ள 10 நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகிய மூன்று நடிகைகளும் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தில் இடம்பிடித்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆஸ்கார் உள்ளிட்ட அனைத்துலக திரைப்பட விழாக் களுக்கு அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கும் அளவுக்கு இன்றைய இந்தி நடிகைகள் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளனர். கோடி கோடியாக அவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள்.
விளம்பரப் படங்கள், வியாபார நிறுவனங்களுக்குத் தூதுவர்கள் என்றும் வருமானம் குவிகிறது. பணத்தைச் சொத்துச் சந்தை, வணிக வளாகங்கள், பங்களா வீடுகள் என்று முதலீடு செய்வதால் இவர்களின் சொத்து மதிப்பு ஆண்டுதோறும் கூடுகிறது. இந்தப் பட்டியலில் தீபிகா படுகோன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.317 கோடி. ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறார். விளம்பரப் படத்துக்கு ரூ.8 கோடி வாங்குகிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.285 கோடி. ஒரு படத்தில் நடிப்பதற்கு இவர் ரூ.12 கோடி பெறுகிறார். விளம்பரப் படங்களுக்கு இவருக்கு ரூ.5 கோடி கிடைக்கிறது.
ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு ரூ.246 கோடி. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்குகிறார். திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள மாதுரி தீட்சித்தின் சொத்து மதிப்பும் ரூ.246 கோடிதான். இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் பெறுகிறார். பிரீத்தி ஜிந்தாவுக்கு ரூ.211 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவர் நடிக்காவிட்டாலும் தொழில்களில் பெரும் தொகையை முதலீடு செய்து அதில் வருமானம் பார்க்கிறார்.