சீனாவைச் சேர்ந்த அதிகாரிகளாக ஆள் மாறாட்டம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 28 வயதுக்கும் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்த வாரத்தில், 20 வயது பெண் ஒருவரும் மற்றொரு 24 வயது பெண்ணும் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து தனித்தனியாக போலிசாரிடம் புகார் கொடுத்தனர்.
சீனாவைச் சேர்ந்த போலிஸ் அதிகாரிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சில மர்ம நபர்கள், இந்த பெண்களைத் தொலைபேசி வழி தொடர்புகொண்டு, அவர்கள் கள்ளப்பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டினர். இந்நபர்கள், பெண்களிடம் அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கோரினர். 24 வயது பெண்ணும் 20 வயது பெண்ணும், மோசடிக்கார்களிடம் முறையே 5,110 வெள்ளியையும் 2,997 வெள்ளியையும் கொடுத்தனர். பின்னர் சந்தேகமடைந்த அப்பெண்கள், போலிசாரிடம் இதுபற்றி புகார் அளித்தனர்.