வில்லங்கமற்ற எட்டு வீடுகளைக் கொண்டிருக்கும் செங் ஹோ ஹவுஸ் ஏலக்குத்தகை மூலம் ஒட்டுமொத்த விற்பனைக்குக் கொடுக்கப்படுகிறது. தொடக்க விலை $28 மில்லியன் என்று தெக்வா ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகையைக் கணக்கிட்டு பார்க்கும்போது, ஒரு சதுர அடி $1,082.9 என்ற விலையில் நிலம் விற்பனைக்கு வருகிறது. இதில் சுமார் $6.1 மில்லியன் கட்டுமானச் செலவும் உள்ளடங்கும். 10% போனஸ் முகப்பு மாடப் பகுதியும் உள்ளடக்கப்படும் பட்சத்தில் நிலத்தின் விலை சதுர அடிக்கு $1,052.5 ஆகக் குறையும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீட்டுத் தொகுதி உள்ள இடத்தின் பரப்பளவு 22,484.9 சதுர அடி. அது 1.4 என்ற கட்டுமான இட விகிதாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது.
ஐந்து மாடி வரை கட்ட அனுமதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்புடைய அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில், 1,076 சதுர அடி பரப்புள்ள சுமார் 29 அடுக்குமாடி வீடுகளை அங்கு கட்டலாம். இந்த வீட்டுத் தொகுதி, எண் 10 கோவன் ரோடு முகவரியில் அமைந்து இருக்கிறது. கோவன் எம்ஆர்டி நிலையத்திலிருந்து 3 நிமிடங்களில் நடந்து இங்கு சென்று விடலாம். ஏலக்குத்தகைகளை வரும் செப்டம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.
ஏலக்குத்தகை மூலம் ஒட்டுமொத்த விற்பனைக்கு கொடுக்கப்படும் செங் ஹோ ஹவுஸ். படம்: தெக்வா ரியல் எஸ்டேட்