சிங்கப்பூரில் அழைத்தால் வரும் பேருந்துச் சேவைகள் ஆறு மாதம் பரிசோதனை திட் டத்தில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. அந்தப் பரிசோதனை வரும் டிசம்பரில் தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. பரிசோதனை காலத்தின்போது பயணிகள் எந்தவொரு பேருந்து நிறுத்தத்திற்கும் வரும் படி பேருந்துகளை அழைக்கலாம். அதேபோல தாங்கள் இறங்கிக்கொள்ள விரும்பும் இடங்கள் பற்றிய விவரங்களையும் தெரிவித்து அவர்கள் கைத்தொலைபேசிச் செயலி வழி வேண்டுகோள் விடுக்கலாம் என்று ஆணையம் தெரிவித்தது.
பரிசோதனை, குறிப்பிட்ட சேவைகளுடன் தொடங்கும். உச்சநேரம் அல்லாத இதர நேரங்களில் பேருந்துக்கு அவ்வளவாக தேவையில்லாத வழித் தடங்களில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பரிசோதனை திட்டம் தொடர் பிலான இடங்கள், செயல்படும் நேரம் போன்ற பல விவரங்கள் பின்னர் ஒரு தேதியில் அறிவிக்கப்படும்.
பரிசோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப் படும் வழித்தடங்களில் வழக்கமாக ஓடுகின்ற பேருந்துகள் தொடர்ந்து சேவை வழங்கும் என்றாலும் அந்த பேருந்துகள் செயல்படும் நேர இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருக்கும். பரிசோதனை தொடர்பில் இரண்டு நிறு வனங்களுக்கு $2.26 மில்லியன் மதிப்புள்ள குத்தகையை தான் வழங்கி இருப்பதாக ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித் தது.