கோலாலம்பூர்: பொதுத்தேர்தலுக்கான நிதியில் முறைகேடு செய்ததாக ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார உளவுத்துறை அமைப்பின் தலைவரான ஹசானா அப்துல் ஹமிட் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக அவரை 5 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் ஹசானாவிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் மாலை 4.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். அரசாங்கத்திற்கு சொந்தமான 49 மில்லியன் ரிங்கிட் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹசானா விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தப் பணம் காணாமல் போனது தொடர்பில் கடந்த திங்கட்கிழமையன்று ஹசானாவின் கீழ் பணிபுரிந்த துணை இயக்குநரும் இதர 6 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.