தம்மிடம் பிரச்சினைக்கு ஆலோசனைக் கேட்டு வந்த உயர்நிலைப்பள்ளி மாணவர் களைப் பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது பள்ளி ஆலோசகருக்கு நேற்று ஈராண்டு, எட்டு மாதம், 12 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க, இரு பிள்ளைகளுக்குத் தந்தை யான அந்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டு உள்ளது. 2011க்கும் 2013க்கும் இடைப் பட்ட காலத்தில் குற்றம் புரிந்த அந்த ஆடவருக்கு எதிராக மொத்தம் ஐந்து பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவாகின. 20 நாட்களுக்கு நடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 2009ஆம் ஆண்டிலிருந்து பள்ளி ஆலோசகராகப் பணிபுரிந்து வந்த அந்த ஆடவர் மீது புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் மூன்றாண்டு காலமாக ஆலோசனைக்கு வந்த இரு மாணவர்களையும் அவ்வப் பொழுது அவர்களில் ஒருவருடன் வந்த நண்பரையும் ஆலோசகர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
மூன்று மாணவர்களும் ஆடவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த பின்னர், பள்ளி அதிகாரிகளிடம் நடந்ததைக் குறித்து புகார் செய்யப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து தமது கட்சிக்காரர் மேல்முறையீடு செய்யவிருப்பதாக தற்காப்பு வழக்கறிஞர் திருவாட்டி மெலனி ஹோ தெரிவித்தார். ஆடவர் $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார் பாலியல் பலாத்காரம் தொடர்பான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஈராண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் அல்லது பிரம்படியோ வழங்கப்படலாம். குற்றம் புரிந்தவருக்கு 50 வயது என்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்கப்படவில்லை.