கோலாலம்பூர்: பூமிபுத்ராக்கள் எனப்படும் மலேசிய மண்ணின் மைந்தர்கள் சுயமாக முன்னேற வேண்டும் என்றும் தங்கள் எதிர் காலத்தை சிறப்பானதாக மாற்றிக் கொள்ள கடினமாக உழைக்க வேண்டும் என்றும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார்.
பூமிபுத்ராக்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய காங்கிரஸ் கூட்டத்தை திரு மகாதீர் நேற்று தொடங்கிவைத்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார். பூமிபுத்ராக்கள் அவர்களின் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்வதற்கான நேரம் இது என்றும் சிறந்த எதிர்காலத்திற்கு கடினமாக உழைப்பதற்கான பயற்சியைத் தொடங்க வேண்டும் என்றும் திரு மகாதீர் கேட்டுக் கொண்டார்.
மண்ணின் மைந்தர்கள் அதிக போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதையும் சுய மாகவே வெற்றி பெற வேண்டும் என்பதையும் அரசாங்கம் உறுதிப் படுத்திக்கொள்ள இருப்பதாகவும் பிரதமர் சொன்னார்.
"நிதி உதவித் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் ஈட்டு வோருக்கு வழங்கப்படும் ரொக்கப் பணம் நம்மை பலவீனப்படுத்தும். உதவியை எதிர்பார்த்து நாம் காத்திருக்கக்கூடாது. நாம் சொந்தமாக முயற்சிகளை எடுக்க வேண்டும்," என்றும் திரு மகாதீர் கூறினார்.
முயற்சி இல்லை என்றால் நமது திறன்கள் படிப்படியாக குறையும் என்றும் அவர் குறிப் பிட்டார். "நாம் நடந்து செல்லவில்லை என்றால் நமது தசைகள் ஒரு நாள் பலவீனம் அடையும், அதே போல்தான் நமது மூளையும். நமது மூளையை நாம் பயன்படுத்தவில்லை என்றால் அதுவும் பலவீனம் அடையும் என்று அவர் கூறினார்.