You are here

$138 மில்லியன் நன்கொடைக்கான ஆதாரங்களை வெளியிட்ட நஜிப்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய $138 மில்லியன், சவூதி அரேபிய அரச குடும்பத்தின் நன்கொடை என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த நன்கொடை குறித்த தகவலை வால் ஸ்திரீட் நாளிதழ் வெளியிட்டிருந்தது. 1எம்டிபி ஊழலை விசாரிக்கும் அதிகாரிகள், திரு நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அந்த பெருந்தொகை மாற்றிவிடப்பட்டதைக் கண்டறிந்ததாக அந்நாளிதழ் கூறியிருந்தது.

சவூதி அரேபிய இளவரசர் அப்துல் அசிஸ் அல்=சவுட்டின் கடிதமும், திரு நஜிப் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஆவணங்களில் அடங்கும். அக்கடிதத்தில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் (413 மில்லியன் ரிங்கிட்) பரிசு பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பெரும்பகுதி தேசிய முன்னணி கூட்டணிக்காக செலவிடப்பட்டதாக திரு நஜிப் விளக்கம் அளித்தார். அதில் குறிப்பாக, அம்னோ கட்சியின் ஜோகூர் பிரிவுக்கு வேன்கள் வாங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் விவரங்களையும் ஆதாரங்களையும் வருங்காலத்தில் தாம் வெளியிட இருப்பதாகத் திரு நஜிப் தெரிவித்தார்.