You are here

போலிசிடம் பொய்ப் புகார் அளித்த ஆடவர் மீது நடவடிக்கை

தன்னை சிலர் தாக்கி, கொள்ளையடித்ததாகப் போலிசாரிடம் பொய்யான புகாரை அளித்த 34 வயது ஆடவர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். உட்லண்ட்ஸ் தொழிற்பூங்கா இ5ல் இந்தச் சம்பவம் நடந்ததாக அவர், செப்டம்பர் 5ஆம் தேதி கொடுத்த தமது புகாரில் குறிப்பிட்டார். ஆயினும், அவர் கூறியதில் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததை ஜூரோங் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கவனித்தனர். இறுதியில் அந்த ஆடவர் பொய்யான தகவலை கொடுத்ததாக அதிகாரிகள் தீர்மானித்தனர். பொய்யான புகார்களை விசாரிப்பதற்குப் பதிலாக உண்மையிலேயே நடந்த குற்றங்களைக் கையாள்வதற்காக தங்களது வளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலிசார் தெரிவித்தனர். இந்த குற்றத்திற்காக அந்த ஆடவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.