You are here

முதல்வர் மீது லஞ்சப் புகார்; நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான லஞ்சப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 17ஆம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் மனுதாரர் ஆர்.எஸ். பாரதி புதிய மனு ஒன்றை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், “முதல்வரின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ள ஊழல் கண் காணிப்புத் துறையே அவருக்கு எதிரான புகாரை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, எந்தவித குறுக்கீடும் இல்லாத சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்,” என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனை ஏற்ற நீதி மன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.