You are here

நீதிமன்றம்: ‘வாட்ஸ்அப்’ செய்தியை சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது

மறைந்த தமது முன்னாள் கணவரின் மத்திய சேமநிதிப் பணம் முழுவதும் தமது இரு மகன்களுக்குச் சேரவேண்டும் என்ற கோரிக்கைக்குச் சான்றாக மாது ஒருவர் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை உயர் நீதிமன்றத்தில் காட்டியிருந்தார். ஆனால் அதைச் சான்றாக ஏற்க அந்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இறந்தவர் அந்த மாதை 2014ல் டிசம்பர் மாதம் விவாகரத்து செய்துவிட்டு மறு ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது மனைவியைக் கரம்பிடித்தார். பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அந்த ஆடவர் கணையப் புற்றுநோயினால் உயிரிழந்தார். சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், இறந்தவரின் மத்திய சேமநிதிப் பணத்தில் பாதித் தொகை அவருடைய இரண்டாவது மனைவிக்கும் மீதமுள்ள பணம் சமமாகப் பிரிக்கப்பட்டு இரு மகன்களுக்கும் சேரவேண்டும்.

இருப்பினும், அனைத்து பணமும் தமது மகன்களுக்கே சேரவேண்டும் என எண்ணிய இறந்தவரின் முதல் மனைவி, அவர்களுக்கு இடையில் நடந்த வாட்ஸ்அப் உரையாடலை நீதிமன்றத்தில் சான்றாகச் சமர்ப்பித்திருந்தார். இதற்கிடையில் ஒவ்வொரு மகனுக்கும் சுமார் $500,000 கிடைக்கவேண்டும் என்றும் மத்திய சேமநிதிப் பணத்தைத் தவிர தமது சொத்திலும் ஒரு பகுதி மகன்களுக்குச் சேர வேண்டும் என்பதை வாட்ஸ்அப் உரையாடல் குறிக்கலாம் எனக் கூறிய முதல் மனைவியின் கோரிக்கை மறுக்கப்பட்டது.