You are here

‘பாகிஸ்தானை மீண்டும் தோற்கடிப்போம்’

துபாய்: பரம எதிரியான பாகிஸ் தானுடன் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்றிரவு இரண்டாவது முறையாக மோத இருக்கிறது. இந்த நிலையில், முதல் ஆட்டத்தில் அவ்வணியை மிக எளிதாக மண்ணைக் கவ்வச் செய்தது போலவே இம்முறையும் நிகழ்த்திக் காட்ட முடியும் என நம்புவதாக இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார். மொத்தம் ஆறு அணிகள் இரு பிரிவுகளாக மோதி வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவிலிருந்து பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் என நான்கு அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. இச்சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை மோதவேண்டும். புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இதன்படி, ‘சூப்பர் 4’ சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பங்ளாதே‌ஷும் நேற்று முன்தினம் மோதின.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட் டத்தின்போது காயமடைந்ததால் தொடரைவிட்டே வெளியேறிய ஹார்திக் பாண்டியாவிற்குப் பதி லாக ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். பங்ளா தேஷ் அணியில் அபு ஹைதருக்குப் பதிலாக முஸ்தஃபிசுர் ரஹ்மான் இடம்பெற்றார்.

பூவா தலையாவில் வென்ற ரோகித் முதலில் இந்திய அணி பந்து வீசும் என அறிவித்தார். அதையடுத்து, பங்ளாதேஷ் அணியின் தொடக்கப் பந்தடிப்பா ளர்களாக லிட்டன் தாசும் நஸ்முல் ஹொசைனும் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவ்விருவரும் ஆளுக்கு ஏழு ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னும் பங்ளாதே‌ஷின் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது. ஷாகிப் அல் ஹசன் (17), முஷ் ஃபிகுர் ரஹீம் (21), முகம்மது மிதுன் (9), மொசாடெக் ஹொசைன் (12) ஆகிய நால்வரின் விக்கெட்டு களையும் கைப்பற்றினார் ஜடேஜா. சற்று நேரம் தாக்குப் பிடித்த மஹ்மதுல்லாவும் 25 ஓட்டங்களில் வெளியேற, ஒரு கட்டத்தில் பங்ளா தேஷ் 101 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்த ளித்தது.

தொடர்ந்து மூன்று ஆட்டங் களில் வென்ற உற்சாகத்தில் பேசிய ரோகித், “தொடக்கத்தில் இருந்தே நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். பந்துவீச்சு அரு மையாக இருந்தது. அதேபோல, மின்னொளியில் பந்தடிப்பது எளி தாக இருக்கும் என்பதையும் அறிந் திருந்தோம். வெற்றியில் அனை வருக்குமே பங்குண்டு. அதே நேரத்தில், நீண்ட நாட்களுக்குப் பின் அணிக்குத் திரும்பியபோதும் ஜடேஜா மிகச் சிறப்பாகப் பந்து வீசியது மகிழ்ச்சி தருகிறது,” என்றார்.

அடுத்ததாக, இன்று மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள நிலையில், “திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் பாகிஸ்தானை வீழ்த்து வது எளிதாக இருக்கும். போதிய ஓய்வெடுத்து, புத்துணர்ச்சியுடன் களமிறங்கி, பங்ளாதே‌ஷுக்கு எதி ராக ஆடியதைப் போல இன்றும் சிறப்பாக ஆட முயல்வோம்,” என்றும் ரோகித் சொன்னார். முன்னதாக, பங்ளாதே‌ஷுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ‘கேட்ச்’களைப் பிடித்ததன்மூலம் ஒரே போட்டியில் நான்கு ‘கேட்ச்’ களைப் பிடித்த சாதனையை சச்சின் உள்ளிட்ட அறுவருடன் பகிர்ந்துகொண்டார் ‌ஷிகர் தவான்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, பங்ளாதேஷ் ஆட்டக்காரர்கள் நால்வரை வெளியேற்றி தமது மறுவருகையை அறிவித்தார். படம்: ஏஎஃப்பி