வெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்

செய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்

வாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று. அந்தப் பாலத்தை இந்த ஐந்து இளையர்களும் வெறுமனே கடந்துவிடவில்லை. கல்விப் பயணத்தின் அருமையை நன்கு அறிந்து, முழுமையாக அனுபவித்து அதைச் சிறப்புற நிறைவேற்றியுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இந்த இளையர்கள் சிறப்புத் தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றுள்ளனர். கல்வியில் மட்டுமின்றி பிற துறைகளிலும் அவர்களில் சிலர் சக்கைப்போடு போடுகின்றனர். இலட்சிய வேட்கையுடன் இருக்கும் இந்த இளம் சாதனையாளர்களின் வெற்றிப் பயணம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர் நிஷாந்த் தியாகராஜன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) மருத்துவத்திலும் அறுவைச் சிகிச்சையிலும் தம் பட்டத்தைப் பெற்றதோடு வாய்ப்பாட்டிலும் பல விருதுகளைப் பெற்றவர் 24 வயது டாக்டர் நிஷாந்த் தியாகராஜான். 2014ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெறும் வருடாந்திர ‘ஸ்பிரிட் ஆஃப் யூத்’ விழாவில் ஆகச் சிறந்த ஆண் பாடகராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் தேசிய கலைகள் மன்றம் ஏற்பாடு செய்த தேசிய இந்திய இசை விழாவில் கர்நாடக இசைக்கான பொதுப் பிரிவில் முதல் பரிசையும் டாக்டர் நிஷாந்த் தட்டிச் சென்றார்.

ரா. அரவிந்த் சிறு வயதிலிருந்தே பொம்மைக் கார் களைப் பழுதுபார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ரா. அரவிந்த், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் ஆக உயரிய பட்டத்தை இவ்வாண்டு பெற்றார். 2015ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளர்கள் வாரியத்தின் உபகாரச் சம்பள விருதைப் பெற்ற 25 வயது அரவிந்த், கல்வியில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் பொறியியல் சார்ந்த போட்டிகளிலும் தமது திறனை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநிலத்தில் 2017, 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துலகப் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பந்தய கார் பொறியியல் போட்டியில் தமது குழுவுடன் சேர்ந்து சிங்கப்பூரையும் தமது பள்ளி யையும் பிரதிநிதித்தார் அரவிந்த்.

ஷாலினி பன்னீர்செல்வம் தமது ஓய்வு நேரங்களில் சமூகச் சேவையில் ஈடுபட்டு வந்த 24 வயது ஷாலினி பன்னீர்செல்வம், அதைத் தமது வாழ்வின் முக்கிய அங்கமாக அமைத்துக் கொண்டார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கலைகள் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில் சமூகப் பணி துறையில் படித்தார். அதில் அவர் சிறப்புத் தேர்ச்சி பெற்று ஹார்னஸ் பட்டத்தைப் பெற்றார்.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உளவியில் பாடத்தைப் பயின்ற ஷாலினி தமது விடுமுறை நாட்களன்று ‘ஏவா’ (AWWA) என்றழைக்கப்படும் குடும்ப சேவை நிலையத்தில் குறைந்த வருமான குடும்பங்களுக்கும் குழந்தை களுக்கும் உதவினார். அங்கே சமூக சேவையின் மீது தமக்கு ஏற்பட்ட ஆர்வத்தை வளர்க்க பல்கலைக்கழகத்தில் சமூகம் சார்ந்த பாடத்தை எடுத்து படித்தார்.

மா. ஷர்னி மருத்துவராகும் கனவைத் தள்ளிவைத்துவிட்டு பேச்சு சிகிச்சைத் துறையில் மேற்படிப்பைத் தொடர முடிவெடுத்துள்ளார் 23 வயது மா. ஷர்னி. பேச்சு சிகிச்சையில் தன் முதுநிலைப் பட்டத்தை அடுத்த ஆண்டில் தொடங் கவுள்ள ஷர்னி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து உயிரியல் துறையில் முதல் நிலை பட்டத்தை பெற்றவர். “ஜிசிஇ மேல்நிலை தேர்வில் நான் சராசரியாக தேர்ச்சி பெற்றாலும், அதில் கிடைத்த அனுபவமே என் பட்டப்படிப்பில் என் முழு முயற்சியை வெளிப்படுத்த ஊக்குவிப்பாக இருந்தது,” என்றார் ஷர்னி. கேகே மகளிர்,சிறார் மருத்துவமனை யில் சிசுக்களின் அவசரச் சிகிச்சை பிரிவில் கடந்த 30 ஆண்டு களாகப் பணியாற்றி வரும் தமது தாயார்தான் தமது முன்மாதிரி என்றார் ஷர்னி. “பேச்சு சிகிச்சை திறன்களுடன் பேச சிரமப்படுவோருக்கு உதவ விரும்புகிறேன்,” என்று கூறினார் செல்வி ஷர்னி.

மா. திருகுமரன் உயர்நிலைப்பள்ளியில் கல்வியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று மனந் தளர்ந்துபோன மா. திருகுமரனை அவரது ஆசிரியர் தட்டி எழுப்பினார். பள்ளி முடிந்து அவர் கொடுத்த பயிற்சி திருகுமரனைக் கல்வியில் வெற்றியைச் சுவைக்க வைத்துள்ளது. என்யுஎஸில் அவர் கணினியல் துறையில் படித்து பட்டம் பெற்றார். தமக்கு தெரிந்த கணினியல் கல்வி யைப் படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தா மல், பல போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். டுனேக் (TUNAC) எனப்படும் அனைத்துல தகவல் அறிவியல் போட்டியில் கலந்துகொண்டு, அப்போட்டி யின் இறுதிச் சுற்றுக்காக அமெரிக்கா விற்குச் சென்று முதல் பரிசை அவர் குழுவோடு கைபற்றினார். 2018-09-23 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்