கதவு திறந்தது, நல்ல காலம் பிறந்தது

பட்டாம்பூச்சிகளாய்ப் பறக்க வேண்டிய பதின்ம வயதுப் பருவத்தில் கூடா நட்பை நாடி, கேடு தரும் பகையைத் தேடிக்கொள்ள, வாழ்க்கை தடம்புரண்டு நான்காண்டு காலம் சிறைவாசம். இருட்டறை தந்த ஞானம், இன்று இந்த இளையரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்து, நம்பிக்கையை விதைத்து, புதிய மனிதனாய் நல்வழியை நோக்கி நடைபோட வைத்துள்ளது.

எஸ்.வெங்கடேஷ்வரன்

அப்பா, அம்மா, அண்ணன்கள், நண்பர்களோடு சேர்ந்து இந்த ஆண்டு தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று திரு கிரிஷிந்திரன் துளிகூட எதிர் பார்த்திருக்கவில்லை.
மே மாத இறுதிவாக்கில் சிறை அதிகாரி அவரிடம் வந்து, "இன்னும் இரண்டு நாட்களில் நீ விடுதலையாகி விடுவாய்," என்று சொன்னபோது அவரால் முதலில் நம்பவே முடியவில்லை.
தனிமையில் அடைபட்டிருந்த தண்டனை முடிவிற்கு வரவிருப் பதை உணரவே அவருக்குச் சில நொடிகள் ஆயின.
"அதை உணர்ந்தபோது எனக்கு உண்டான சந்தோஷத்தை எப்படி விவரிப்பது என்றே தெரிய வில்லை. மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினேன். வானில் பறப்பது போல் இருந்தது. பொங்கி வழிந்த மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனிருந்த எல் லாரிடமும் நான் விடுதலையாகப் போவதைச் சொல்லிச் சொல்லி இன்பமடைந்தேன். என் மகிழ்ச்சி அவர்களையும் தொற்றிக்கொண் டது. சிலர் வாழ்த்துகள் கூறினர். சிலர் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்துத் தங்களுக்கும் விடுதலை கிடைக் கும் என்ற நம்பிக்கை என்னுடன் இருந்த எல்லாருக்கும் பிறந்தது. அந்தத் தருணத்தை, அது தந்த பேரின்பத்தை மறக்கவே முடி யாது," என்று விவரிக்கும்போது அந்த 22 வயது இளையரின் குரலில் வெளிப்பட்ட மகிழ்ச்சியை உணர முடிந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டில் ஒருநாள் ஹாவ்லக் சாலையிலுள்ள அரசு நிதீமன்றத்திற்கு வெளியே இரண்டு இந்தியர் குண்டர் கும்பல்கள் பழைய கணக்கை முடித்துக்கொள்ள, நாள், நேரம் குறித்து வந்திருந்தனர். 13 வயதில் குண்டர் கும்பலில் சேர்ந்த திரு கிரிஷி ஐந்தாண்டு காலமாக அந்தக் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். நள்ளிரவில் நடந்த அச்சண்டையில் ஆயுதத் துடன் பங்கேற்ற திரு கிரிஷிந்திரன் முக்கிய குற்றவாளியானார்.
குற்றவியல் (தற்காலிகச் சட்டப் பிரிவுகள்) சட்டத்தின்கீழ்க் குற்ற வாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அதே ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி சிறை சென்றார். இந்தச் சட்டத்தின்கீழ்ச் சிறைக்குச் செல் பவர்களுக்கு எப்போது விடுதலை என்பதே தெரியாது.
கிட்டத்தட்ட நான்காண்டுகள். இரவா பகலா என்றுகூட அறிய முடியாமல் சாங்கி சிறைச்சாலை யில் இன்ன இடமென்று தெரி யாமல், ஓர் அறையென்றும் சொல்ல முடியாத குறுகலான இடத்தின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருந்த அந்த நாட்கள் திரு கிரிஷிந்திரனின் வாழ்வில் மிக மோசமான காலம்.
"முதல் ஆறு மாதங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். அதன் பிறகு 23 மணி நேரமும் இருட்டு அறையில் அடைந்து கிடக்க வேண்டும். செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல், பார்ப்பதற்கு எதுவுமே இல்லாமல் கண்ணைத் திறந்தா லும் மூடினாலும் இருட்டாகவே இருந்த அறைக்குள் வெறுமனே உட்கார்ந்து இருக்கும்போது பல விதமான எண்ணங்கள் மனத்தில் அலைபாயும்," என்று மெல்லிய குரலில் அந்தக் காலகட்டத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
"வெளிமனிதர்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைப்பது அரிது. மாதம் இருமுறை குடும்ப உறுப் பினர்கள் மட்டுமே சிறைக்கு வர முடியும். அதுவும் குறிப்பிட்ட நேரம்தான்," என்று சிறை வாழ்க் கையின் சிரமங்களை விவரித்தார்.
அந்தச் சமயத்தில் அவருக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தது அவருடைய பெற்றோர் தான். நடந்தவைகளை நினைவு படுத்திக் குறைகூறாமல், தங்க ளின் மகன் நல்வழிக்குத் திரும்பி, மற்றவர்களைப் போல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும் எனும் ஒரே நோக்கத்துடன் நல்ல விஷயங்களை மட்டுமே கூறி வந்தனர்.
குண்டர் கும்பல் சண்டை போன்ற குற்றச்செயல்களுக்காகத் தண்டனைப் பெற்று இளையர்களும் முதியவர்களும் சிறைக்கு வரு வதைப் பார்த்தார் கிரிஷிந்திரன்.
"என்னுடன் 33 வயது நிரம்பிய ஒருவர் சிறையில் இருந்தார். அவர் 15 வயதில் சிறுவர் இல் லத்துக்குச் சென்றவர். ஆறு ஆண்டுகள் ஆகியும் அவருக்கு எப்போது விடுதலை என்று தெரியவில்லை. அவரைப்போல இன்னும் பலரைப் பார்த்தேன். அவர்களது வாழ்க்கையே குற் றங்களும் தண்டனையுமாக ஆகி விட்டதைப் பார்த்தபோது, என் வாழ்க்கையும் இப்படி ஆகிவிடக் கூடாது என்று முடிவெடுத்தேன். இந்த நிலைமை மாற வேண்டும், நான் மாற வேண்டும், என் வாழ்க்கை மாற வேண்டும் என்ற எண்ணம் மெல்ல மெல்ல, ஆனால் ஆழமாக என் மனத்தில் பதிந்தது.
"இப்போது யோசித்துப் பார்த் தால் நான் செய்த செயல்களுக்கு மதிப்பே இல்லை. சிறு வயதில் ஒரு பெரிய அதிகாரம் வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்தத் தவற்றை இப்போது உணர்கிறேன். மீண்டும் அப்பாதையில் செல்ல மாட்டேன்," என்றார் அவர்.
அவரது நன்னடத்தை, செயல் பாடுகள், புதிய வாழ்க்கையைத் தொடங்க அவரிடம் காணப்பட்ட உந்துதல் எல்லாம் அவரின் விடு தலை நாளை விரைவுபடுத்தின.
இவ்வாண்டு ஜூன் முதல் தேதி சிறையிலிருந்து விடுதலை யான கிரிஷிந்திரனை அவரது அப்பா திரு பன்னீர்ச்செல்வம் இராமகிருஷ்ணன் டாக்சியில் வீட் டிற்கு அழைத்து வந்தார்.
வீட்டின் கதவைத் திறந்து வைத்துக் காத்திருந்த அம்மா திருமதி கலா ரகுவரனுக்கு இளைய மகனைக் கண்டதும் கண்ணீர் பொங்கி வழிந்தது.
"அப்போது அவனைக் கட்டி அணைத்து வீட்டிற்குள் வரவேற் பதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. கிரிஷிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவதே என் தலை யாய கடமை என அன்று முடிவு எடுத்தேன்," என்றார் துணைப்பாட ஆசிரியையாகப் பணிபுரியும் அந்த 52 வயது தாய்.
திரு கிரிஷிந்திரனின் பெற் றோர் இருவரும் கல்வித் துறை யில் இருப்பதால் கல்வியின் முக் கியத்துவம் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
"கல்வி ஒன்றுதான் வாழ்வில் முன்னேற்றம் காணச் சிறந்த வழி. என் மகனின் படிப்பிற்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து வருகிறேன்," என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழகத் தில் ஆசிரியராகப் பணிபுரியும் 54 வயது திரு பன்னீர்ச்செல்வம்.
"சிறை சென்று நல்வழிக்குத் திரும்பியவர்களை நான் பாடம் சொல்லித்தரும் கல்விக் கழகத் தில் பார்த்திருக்கிறேன். என் மகனும் நிச்சயம் மனம் மாறி வாழ்வில் முன்னேறுவான் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே இருந்தது. இன்று அதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று அவர் சொன்னார்.
அத்துடன், "கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தப் பண்டிகை யையும் நாங்கள் கொண்டாட வில்லை. தீபாவளிக் கொண்டாட் டங்களுக்குக்கூட மற்றவர்களின் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து வந்தோம். கிரிஷி விடுதலையான தும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அவனது பிறந்தநாளைக் கொண் டாடி மகிழ்ந்தோம். இப்போது தீபாவளித் திருநாளையும் குடும் பத்தினர், நண்பர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடவுள்ளோம்," என்று கண்கள் பனிக்க நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு பன்னீர்செல்வம்.
பெற்றோரின் நல்லாசிகளைப் பெற்றுத் தீபாவளி கொண்டாட்டத் தைத் தொடங்க இருப்பதாக கூறும் திரு கிரிஷிந்திரன், அந்த நன்னாளில் வழக்கம்போல உற் றார் உறவினர் வீடுகளுக்குச் சென்று மகிழ்ச்சியைப் பரிமாறக் கொள்ளவிருக்கிறார்.
'பிஎஸ்பி அகடமி'யில் வர்த்தக நிர்வாகத் துறையில் ஒன்பது மாத பட்டயப் படிப்புப் பயின்று வரும் திரு கிரிஷிந்திரனுக்கு எதிர் காலத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்கி அதில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்பதே லட்சியம்.


இளைய மகன் கிரிஷிந்திரன் (இடது) சிறையிலிருந்து விடுதலையான பிறகே வீட்டில் மகிழ்ச்சி திரும்பியுள்ளதாகக் கூறினார் அவரின் தந்தைத் திரு பன்னீர்ச்செல்வம் இராமகிருஷ்ணன். கடந்த நான்காண்டு காலமாகத் தாங்கள் எந்தப் பண்டிகையையும் கொண்டாடவில்லை, தீபாவளிக் கொண்டாட்டங்களுக்காக உற்றார் உறவினரின் வீடுகளுக்கும் சென்றதில்லை என்ற அவர், இம்முறை குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து தீபாவளித் திருநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். (கீழ்ப்படம்) இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்ட திரு கிரிஷிந்திரனின் பிறந்தநாள் விழாவே நான்காண்டுகளுக்குப் பிறகு அவரின் வீட்டில் இடம் பெற்ற முதல் கொண்டாட்டம். (படத்தில் இடமிருந்து) மூத்த அண்ணன் சுஜீந்திரன், 26, தந்தை பன்னீர்ச்செல்வம், 54, கிரிஷிந்திரன், 22, தாயார் கலா ரகுவரன், 52, இரண்டாவது அண்ணன் சுரேந்திரன், 25. படங்கள்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!