உலகத் தரம் வாய்ந்த வர்த்தக சூழல்: சீனா

ஷாங்காய்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னைப் பேணித்தனமான வர்த்தக நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். இதனை கடுமையாகச் சாடிய சீன அதிபர் ஸி ஜின்பிங், இறக்குமதி வரிகளை மேலும் குறைத்து தம்முடைய நாட்டின் சந்தைகளைத் திறந்துவிடப் போவதாக அறிவித்தார். “உலகத் தரம் வாய்ந்த வர்த்தக சூழலை உருவாக்குவோம்,” என்றும் அதிபர் ஸி அறைகூவல் விடுத்தார்.

ஷாங்காயில் நடைபெற்ற சீனாவின் அனைத்துலக இறக்குமதி கண்காட்சியைத் திறந்து வைத்து அவர் உரையாற்றினார். சீனப்பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் வரி விதிப்பதைச் சுட்டிக்காட்டிய திரு ஸி, “அண்டை வீட்டுக்காரனைப் பிச்சைக்காரனாக்கும் போக்கு உலகை தேக்கமடையச் செய்துவிடும்,” என்று எச்சரித்தார். மேலும் பேசிய அவர், உலகமயமாக்கலை சீனா தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் உள்நாட்டு பயனீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுசார்ந்த சொத்துகளுக்கான அமலாக்க நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார்.

ஐரோப்பா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் வர்த்தகப் பேச்சு நடத்துவோம் என்றும் அதிபர் ஸி சொன்னார். அனைத்துலக இறக்குமதி கண்காட்சியில் 172 நாடுகள், வட்டாரங்களைச் சேர்ந்த 3,600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.