பாலியல் கும்பல் முறியடிப்பு: சீனா, சிங்கப்பூர் நாடுகளில் 201 பேர் கைது

சிங்கப்பூர் போலிசும் சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சும் இந்த ஆண்டு அக்டோபர் 22 முதல் நவம்பர் 23 வரை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் விளைவாக, எல்லை கடந்து செயல்படும் பாலியல் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டு உள்ளது. இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சிங்கப்பூரிலும் சீனாவிலும் 83 இடங்களில் சோதனைகளை நடத்தினார்கள். மாதர் சாசனத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களுக்காக சிங்கப்பூரில் 19க்கும் 53க்கும் இடைப்பட்ட வயதுள்ள 173 மாதர்களும் 12 ஆடவர்களும் கைது செய்யப்பட்டார்கள். சீனாவில் ஐந்து மாதர்களும் 11 ஆடவர்களும் பிடிபட்டனர். அவர்களுக்கு வயது 21 முதல் 48 வரை என்று போலிஸ் அறிக்கை ஒன்று கூறியது. சிங்கப்பூரில் ஏறக்குறைய $70,000 ரொக்கம், மடிக்கணினிகள், கைபேசிகள் கைப்பற்றப்பட்டன. சீனாவில் $83,300 மதிப்புள்ள சீன நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தகைய சட்டவிரோத காரியங்களுக்கு எதிராக போலிஸ் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.