‘பலோன் டிஓர்’ விருது வென்ற மோட்ரிச்

பாரிஸ்: இவ்வாண்டுக்கான பலூன் டிஓர் எனும் உயரிய காற்பந்து விருதை ரியால் மட்ரிட், குரோ‌ஷிய வீரர் லூக்கா மோட்ரிச் தட்டிச் சென்றுள்ளார். அண்மைய ஆண்டுகளில் இந்த விருதை பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸியும் ரியால் மட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மாறி மாறி வென்று வந்தனர். இம்முறை 33 வயது மோட்ரிச் விருதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டார். கடந்த மே மாதம் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியை ரியால் மட்ரிட் வென்றது. ரியால் மட்ரிட்டின் வெற்றிக்கு மோட்ரிச் முக்கிய பங்காற்றினார். அதுமட்டுமல்லாமல், இவ்வாண்டு நடந்து முடிந்த உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் குரோ‌ஷியாவின் அணித் தலைவராக அவர் செயல்பட்டார்.

இறுதி ஆட்டம் வரை சென்ற குரோ‌ஷியா 4-2 எனும் கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. உலகக் கிண்ணத்தின் ஆகச் சிறந்த ஆட்டக்காரர் விருது மோட்ரிச்சுக்கு வழங்கப்பட்டது. பலூன் டிஓர் விருது பெற்ற பிறகு அரங்கில் கூடியிருந்தோரிடம் மோட்ரிச் பேசினார். “இதற்கு முன்பு இப்படி ஓர் உணர்வை நான் அனுபவித்ததில்லை. எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. “எனக்கு எற்பட்டிருக்கும் உணர்வை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது,” என்று மோட்ரிச் தெரிவித்தார். விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமது குடும்பத்தினருடன் மோட்ரிச் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். இவ்வாண்டு காற்பந்து வீராங்கனைகளுக்கு முதல்முறையாக பலூன் டிஓர் விருது வழங்கப்பட்டது.

நார்வே நாட்டின் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரரான ஏடா ஹேகர்பர்க்கிடம் அந்த விருது சென்றது. ஹேகர்பர்க் விருது வாங்கி கூடியிருந்தோரிடம் பேச இருந்தபோது நிகழ்ச்சியை வழிநடத்தியவர் அவரைக் கவர்ச்சி நடனம் ஆடச் சொன்னார். அதற்கு ஹேகர்பர்க் மறுத்துவிட்டார். வழிநடத்துநர் நடந்துகொண்ட விதம் குறித்து பலர் அதிருப்திக் குரல் எழுப்பினர். இதன் விளைவாக அவர் ஹேகர்பர்க்கிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆகச் சிறந்த இளம் காற்பந்து வீரருக்கான விருதை பிரான்சின் கிலியன் எம்பாப்பே வென்றார். 19 வயது எம்பாப்பே உலகக் கிண்ணப் போட்டியில் சக்கைப்போடு போட்டு பிரான்ஸ் கிண்ணம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் அப்போட்டியில் நான்கு கோல்களைப் போட்டார்.

விருது வென்ற (இடமிருந்து வலம்) லூக்கா மோட்ரிச், ஏடா ஹேகர்பர்க், கிலியன் எம்பாப்பே. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது