மல்லையா: 100% கடனையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்

புதுடெல்லி: இந்திய வங்கிகள் பலவற்றிலும் சுமார் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு, அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இப்போது “நான் வாங்கிய 100% கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்திவிடுகிறேன். தயவுசெய்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று வங்கிகளுக்கு கெஞ்சலுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மல்லையாவை லண்டனில் இருந்து நாடு கடத்தக்கோரி இந் தியா தொடுத்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 10ஆம் தேதி அளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நெருக்கடியான சூழ் நிலையில், மல்லையா தான் முழுக் கடனையும் திரும்பச் செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத் தில், “அரசியல்வாதிகளும் ஊட கங்களும் நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டும் என்றே திரும்பச் செலுத்தாமல் ஓடிவிட்டதாகக் கூறுகின்றனர்.

இது தவறு. இந்த விஷயத்தை நான் சட்டபூர்வமாக சந்தித்துக் கொள்வேன். ஆனால் இங்கு முக்கிய விஷயம் அது மக்கள் பணம். அந்தப் பணத்தை நான் முழுவதுமாக செலுத்திவிடுகிறேன். வங்கிகளும் அரசாங்கமும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள் கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மல்லையா. படம்: ராய்ட்டர்ஸ்