மு.க.ஸ்டாலின், தமிழிசை இடையே நீடிக்கும் ‘வார்த்தைப் போர்’

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் புல் கூட முளைக்காது என்ற சூழலில், தாமரை எப்படி மலரும்? என பாஜகவை மறைமுகமாக விமர்சித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, ‘மழை வந்தால் குளம் நிறையும், சூரியன் மறையும், தாமரை மலரும்’ என்று தமிழிசை பதிலடி கொடுத்தார். இதையடுத்து டுவிட்டரில் பதிவிட்ட ஸ்டாலின், ‘தாமரை மலர சூரிய சக்தி தேவை என்றும் சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கும் தமிழிசை தற்போது பதிலடி கொடுத்துள்ளார். “சூரிய சக்தி செடியிலிருக்கும் மலரைக் கருகச் செய்யும், குளத்தில் மிதக்கும் தாமரையைக் கருகச் செய்யாது. கருகச் செய்யவும் முடியாது. இது இயற்கை நியதி,” என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.