‘ஓடு, பதுங்கு, தெரிவி’ - நடித்துக்காட்டி விளக்கம்

ஒரு மதிய வேளையில் துப்பாக்கித் தோட்டாக்கள் காற்றைத் துளைத்துச் செல்ல, சில நொடிகளில் முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரர்கள் இருவர் குடியிருப்புப் பேட்டையிலுள்ள காப்பிக் கடைக்குள் நுழைகின்றனர். கூச்சலுக்கும் குழப்பத்திற்கும் இடையில் மக்கள் தப்பிச் செல்ல முயல்கின்றனர். மெதுவாகச் செயல்பட்ட ஐவரைத் துப்பாக்கிக் காரர்கள் பிணை பிடித்து வைக்கின்றனர்.

தப்பிச்சென்ற ஒருவர், தூணுக்குப்பின் பாதுகாப்பாக ஒளிந்து கொண்டு, 71999 என்ற எண்ணில் காவல்துறையினருக்குக் குறுந்தகவல் அனுப்புகிறார். இதுபோன்ற சம்பவக் காட்சிகள் நாடெங்கிலும் பற்பல அக்கம்பக்கங்களில் நடித்துக் காட்டப்படும். தொடக்கமாக சனிக்கிழமை மே 28ம் தேதி சொங் பாங்கிலும், ஞாயிற்றுக்கிழமை ஜூரோங் ஸ்பிரிங்கிலும் சம்பவக் காட்சிகள் படைக்கப்படும்.

பொதுமக்கள் சம்பவக் காட்சிகளைப் பார்வையிட்டு, காவல் துறையினர் அறிவுறுத்தும் “ஓடு, பதுங்கு, தெரிவி” ஆகிய உத்திகளைக் கற்றுக்கொள்ளலாம். காப்பிக்கடை சம்பவக் காட்சி போன்ற பயங்கரவாதத் தாக்கு தலின்போது இந்த உத்திகளைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம். “இடர்காப்பை மெத்தனமாகக் கருதும் போக்கு பொதுமக்களி டையே இருப்பதால், அவர்களிடம் சென்று சூழ்நிலையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது இப்போது முக்கியமாக இருக்கிறது,” என்றார் காவல்துறை துணை உதவி ஆணையாளர் பவ்லின் யீ. இவர் சமூகப் பங்காளித்துவப் பிரிவின் தலைவர்.

காப்பிக் கடையில் இருந்த ஐந்து பேரை இரண்டு துப்பாக்கிக்காரர்கள் பிணையாகப் பிடித்து, அதை உள்துறைக் குழுவினர் எதிர்கொண்டதாக நடந்த பாவனைப் பயிற்சி நேற்று சொங் பாங் சந்தை, உணவங்காடிப் பகுதியில் நிகழ்த்திக் காட்டப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்