உயர்நிலை மாணவருக்கும் இனி உணவு மானியம்

சுதாஸகி ராமன்

அடுத்த மாதம் முதல் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் பள்ளி உணவுத் திட்டத்தின் கீழ் உணவு மானியங்களைப் பெறுவார்கள். இதுவரை அந்தத் திட்டம் தொடக்கநிலை மாணவர்களுக்கு மட்டுமே பயன்பட்டது. உணவு வாங்கிச் சாப்பிட மாணவருக்கு வாரத்திற்கு ஏழு முறை $2 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாணவர்கள் காலையில், இடைவேளையின் போது அல்லது மதியத்தில் உணவு உண்ணப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படவிருக்கும் இத் திட்டத்தால் 25,000 முதல் 27,000 மாணவர்கள் வரை பயன் அடைவார்கள். மாணவர்களின் பசியைப் போக்கி அவர்கள் கற்றலில் கவனத்தைச் செலுத்த திட்டம் உதவும்,” என்றார் தற்காலிக கல்வி அமைச்சர் (பள்ளிகள்) திரு இங் சீ மெங். வாரத்திற்கு ஏழு முறை உயர்நிலைப் பள்ளி மாணவர் களுக்கு $2.50 அளிக்கப்படும்.

பள்ளி சார்ந்த மாணவர் பராமரிப்பு மையங்களால் பயன் அடைந்த மாணவர்களும் அவர் களுடைய குடும்பங்களும் நேற்று ஸிங்நான் தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்ப தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இங் இந்த விவரங்களைத் தெரிவித்தார். அவருடன் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், கல்வி, வர்த்தகத் தொழில் அமைச்சுகளின் நாடாளு மன்றச் செயலாளர் லோ யென் லிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.