அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் புகுந்த கார்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றின் கீழ்த் தளத்தில் இருக்கும் காலியிடத்தில் கார் மோதி மாட்டிக்கொண்ட சம்பவம் உட்லண்ட்சில் நிகழ்ந்தது. உட்லண்ட்ஸ் அவென்யூ 6, புளோக் 791ன் மின்தூக்கி முகப் பில் நேற்று பிற்பகல் 3.15 மணி அளவில் கார் ஒன்று நிற்பதைக் கண்டு குடியிருப்பாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த சில்வர் நிற டொயோட்டா காரானது படிக்கட்டுச் சுவருக்கும் இன்னொரு சுவருக்கும் இடையே சிக்கிக்கொண்டது. இதனால் அதன் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அடுக்குமாடி கார் பேட்டையில் இருந்து கிளம்பிய அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி அருகில் இருந்த புளோக்கினுள் புகுந்து மின்தூக்கி முகப்பையொட்டி, மாடிப்படிகளில் மோதி நின்றது. கார் ஓட்டுநருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டபோதும் அவர் மருத்துவமனை செல்ல மறுத்து விட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

கட்டுப்பாட்டை இழந்து ஓடி வீவக குடியிருப்பின் மாடிப்படிகளில் மோதி நின்ற கார். படம்: தி நியூ பேப்பர்

Loading...
Load next