தீவு விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

ஜூரோங்கை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், தோ பாயோ லோரோங் 6 வெளிவழிக்கு அருகே நேற்று பிற்பகலில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அந்தக் கருநீல நிற வோக்ஸ்வேகன் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது. பிற்பகல் மூன்றேகால் மணியளவில் சம்பவ இடத்திற்கு ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ சென்றபோது தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டது. சம்பவம் குறித்து பிற்பகல் 2.35 மணிக்குத் தகவல் கிடைத்ததும் உடனடியாக ஒரு தீயணைப்பு வாகனம், ஓர் அவசர மருத்துவ வாகனம், இரு தீயணைப்பு மோட்டார்சைக்கிள்களை அனுப்பியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்