பிரதமர் லீ: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை - ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம்

பிரதமர் என்ற முறையில் தனக்கு உள்ள அதிகாரத்தைத் தான் தவ றாகப் பயன்படுத்திக் கொண்டிருப்ப தாக தன் உடன்பிறந்தோர் கூறிய குற்றச்சாட்டுகளைத் திரு லீ சியன் லூங் மறுத்துள்ளார். இதில் தனக்கு இருக்கும் தனிப்பட்ட நலன்களை பிரதமர் என்ற முறையில் தனக்குள்ள பொதுவான கடமைகளில் இருந்து பிரித்து வைத்து செயல்பட்டு இருப்ப தாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் வீடு தொடர்பாக நாடாளுமன்றம் விவாதிப்பதற்காக நேற்றும் இன்றும் என இரு நாட்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், நேற்று அவையில் பேசிய திரு லீ மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவாதத்தில் தங்களுக்குள் எழும் வினாக்கள், ஐயங்கள் அனைத்தையும் எழுப்பித் தெளிவு பெறலாம் என்றும் அதன் மூலம் அரசாங்கத்தின் மீதான நம்பிக் கையும் வலுப்பெறும் என்று அவர் கூறினார். “சிங்கப்பூரில் சட்டத்தின்முன் அனைவரும் சமம். இதைத் திரு லீ மற்றவர்களைவிட நன்கு உணர்ந்து இருந்தார். வருத்தமளிக்கும் இந்தப் பிரச்சினை ஓயும்போது, அரசாங்கம் வெளிப்படையாகவும் பாரபட்சமில்லா மலும் முறையாகவும் செயல்படுவது, அதாவது சிங்கப்பூரில் திரு லீ குவான் இயூவின் வீடாக இருந்தா லும் அதுவும் அவரது விருப்பங்களும் சட்டத்திற்குட்பட்டே முடிவு செய்யப் படும் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்,” என்று பிரதமர் விளக்கி னார். மேலும், திரு லீ குவான் இயூ அமைத்துள்ள பெருமைமிக்க, நேர் மையான அரசு முறை கடுமையான, நீடித்த தாக்குதல்களையும் தாங்கி நிற்பதோடு, அதிலிருந்து எவ்விதக் களங்கமுமின்றி வலுவாக மீண்டெழக் கூடியது என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெளிவுபடுத்தினார்.

“இதைத்தான் மறைந்த திரு லீ நிர்மாணித்தார், எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டை அல்ல,” என்று பிரதமர் கூறினார். பிரதமர் லீயின் சகோதரி டாக்டர் லீ வெய் லிங்கும் சகோதரர் திரு லீ சியன் யாங்கும் தங்களது மூத்த சகோதரரான பிரதமர் லீ ஆக்ஸ்லி ரோடு வீடு இடிக்கப்படுவதைத் தடுக்க தமது அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியதாக குற்றம் சாட்டி ஜூன் மாதம் 14ஆம் தேதி அறிக்கை விடுத்திருந்தனர். பிரதமர் லீயின் இளைய உடன் பிறப்புகள் இருவரும் அந்த வீடு இடிக்கப்பட வேண்டும் என்கின்ற னர். அதுவே தங்கள் தந்தையின் விருப்பம் என அவர்கள் தெரிவிக் கின்றனர். இதில், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் லீ, ஒரு மகனாக தானும் தன் தந்தையின் விருப்பத்தை ஆதரிப்ப தாகக் கூறியிருந்தார்.

பொதுவான கடமைகளையும் தனது தனிப்பட்ட நலன்களையும் பிரித்து வைத்துச் செயல்பட்டிருப்பதாகப் பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார். படம்: gov.sg