தேசிய சேவையின்போது காயமடைந்த உள்ளூர் தொலைக்காட்சி நடிகர் அலோய்சியஸ் பாங் மரணம்

தேசிய சேவையின்போது காயமடைந்த உள்ளூர் தொலைக்காட்சி நடிகர் அலோய்சியஸ் பாங் வெய் சியோங் புதன்கிழமை இரவு மரணம் அடைந்தார்.

நியூசிலாந்தில் ராணுவப் பயிற்சியின்போது காயமடைந்த 28 வயது ‘கார்பரல் ஃபர்ஸ்ட் கிளாஸ்’ (சிஎஃப்சி) பாங்கிற்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல், புதன்கிழமை இரவு 8.45 மணிக்கு அவர் மரணம் அடைந்ததாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்தது.

தயார்நிலை தேசிய சேவையின் போது பீரங்கிப் படையில் தொழில்நுட்பராகப் பணியாற்றினார் பாங். 26ஆம் சிங்கப்பூர் பீரங்கிப் படையைச் சேர்ந்த அவர் சிங்கப்பூரின் தானியக்க 'ஹவிட்ஸர்' ரக பீரங்கியில் மேலும் இரண்டு ராணுவ வீரர்களுடன் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது பீரங்கி இறக்கப்பட்டபோது பாங்கிற்கு அடிபட்டது.

அவர் உடனே நியூசிலாந்திலுள்ள வைக்காட்டோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது  சிகிச்சையில் உதவ சிங்கப்பூரின் டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டியோ லி சர்ங், நியூசிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அலோய்‌ஷியசின் நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் ஆகியவை செயலிழந்துவிட்டதால் அவற்றுக்குச் செயற்கை செயல் கருவிகள் பொருத்தப்பட்டன. ஐந்து நாட்களில் அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பாங் மரணம் அடைந்தார்.

பாங்கிற்கு ஏற்பட்ட விபத்து எப்படி  நேர்ந்தது என விசாரிக்க தனிப்பட்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும். இன்று, வியாழக்கிழமை முதற்கட்ட விசாரணையின் முடிவுகள் தெரிவிக்கப்படும்.

பாங்கின் நல்லுடலை மீண்டும் சிங்கப்பூருக்குக் கொண்டு வர தற்காப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. திரு பாங்கின் மறைவுக்கு தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் அவரது குடும்பத்தாருக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொள்வதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

 

 

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஏழாவது நாளாக நீடித்துவரும் போராட்டம். படம்: இபிஏ

17 Jun 2019

போராட்டத்தைத் தொடரும் மேற்கு வங்காள மருத்துவர்கள்;  இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

ஹாங்காங் நகர வீதிகள் நேற்று மனிதக் கடலாகக் காட்சியளித்தன. படம்: ராய்ட்டர்ஸ்

17 Jun 2019

ஹாங்காங்கில் மீண்டும் எதிர்ப்புப் பேரணி 

ஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

14 Jun 2019

எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி