மின்னிலக்கப் பாதையில் லிட்டில் இந்தியா

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழில் சபை தமது புதிய இணையத்தளத்தையும் திறன்பேசிச் செயலியையும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. (இடமிருந்து) சபையின் துணைத் தலைவர்கள் பிரசூன் முகர்ஜி, மகேஷ் சிவசாமி, சபையின் இயக்குநர் குழு உறுப்பினர் முரளிகிருஷ்ணன், அமைச்சர் எஸ் ஈஸ்வரன், சபையின் தலைவர் டாக்டர் டி சந்துரு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி குமரன் பரதன், லிஷா அமைப்பின் தலைவர் ராஜ்குமார் சந்திரா. படம்: திமத்தி டேவிட் 

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள வர்த்தகர்கள் மின் வர்த்தகம், இணையம் வழி கட்டணம் செலுத்துவது போன்ற மின்னிலக்க முறைகளை மேலும் அரவணைக்க உதவும் நோக்கில் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபை தனது செயல்திட்டங்களை அறிவித்துள்ளது. 
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர், லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் சபை நேற்று இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டது. 
சபையின் ‘எஸ்எம்இ சென்டர்’ எனப் படும் சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்கு ஆலோசனை வழங்கும் மையங்களின் மூலம் பல நிறுவனங்கள் பயன்பெற்று வருவதாக சபையின் தலைமை நிர்வாக அதிகாரி குமரன் பரதன் குறிப்பிட்டார். 
லிட்டில் இந்தியாவில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ‘எஸ்எம்இ சென்டர்’ மூலம் இதுவரை 120 நிறுவனங்கள் பயன் பெற்றுள்ளதாக அவர் பெருமிதம் கொண்டார். 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன், மின்னிலக்க மயம் என்பது எந்த ஒரு தொழில் துறைக்கோ வர்த்தகத்திற்கோ மட்டும் உரியதல்ல என்றார். அனைத்து நிறுவ னங்களும் தேவைக்கேற்ப மின்னிலக்க மயமாதலைத் தழுவி, அதன் பயன்களைப் பெறவேண்டும் என்று அமைச்சர் அழைப்பு விடுத்தார். 
லிட்டில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மின்னிலக்கமயமாதலைத் தழுவும் பட்சத்தில் அரசாங்க மானியங் களைக்கொண்டு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் ஊழியர்களைத் தயார்படுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 