துவாஸ் சோதனைச்சாவடியில் பேருந்து விபத்து; பெண் மரணம்

துவாஸ் சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை பேருந்து ஒன்று சாலைத் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானதில் 35 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 16 பேர் காயமுற்றனர்.
விபத்து காரணமாக அதிகாலை 4.20 மணி முதல் கனரக வாக னங்களுக்கான சாலைத் தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு அந்தத் தடம் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.
“பேருந்து ஓட்டுநர் தமது இருக்கையில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார். பின்னர் சாதனங்களின் உதவியுடன் அவர் பேருந்தில் இருந்து மீட்கப்பட்டார்,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இரு பெண் பயணிகள் மேம் பாலத்திற்குக் கீழே விழுந்து கிடந்ததை அதிகாரிகள் கண்டனர். அவர்களில் ஒருவர் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார் என்றும் இன்னொருவர் பலத்த காயம் அடைந்திருந்தார் என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பேருந்து ஓட்டுநரும் காயமுற்ற 11 பயணிகளும் சிகிச்சைக்காக இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிய அளவில் காயமடைந்த பயணிகள் நால்வர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டனர்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்களில் நால்வர் சிகிச்சை முடிந்து நேற்று பிற்பகலில் வீடு திரும்பினர். இருவர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் ஐவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர் என்றும் மேலும் ஒருவருக்குச் சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.
விபத்துக்குள்ளான பேருந்தில் தனது ஊழியர்கள் சிலரும் இருந்த தாக கணினித் தொழில்நுட்ப நிறு வனமான ஹெச்பி (HP) தெரிவித்தது.
விபத்து தொடர்பில் போலிஸ் விசாரித்து வருகிறது.

இந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் ஒருவரான திருவாட்டி வாணி, 43, கையில் ஏற்பட்ட காயத்திற்காக இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவர் ‘ஹெச்பி’ தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். படங்கள்: டீஜே நேஷ்/ஃபேஸ்புக்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா

படம்: தி நியூ பேப்பர்

19 Mar 2019

சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்