களைகட்டிய பங்குனி உத்திரம்

சம உரிமையோடு சிங்கப்பூரில் இந்திய விழாக்கள் கொண்டாடப்படுவது ஒரு பெரிய விஷயம் என்று கூறிய சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் மக்கள் அவரவர் சமயங்களைப் பின்பற்ற வழிவகுக்கும் நம் சமுதாயத்தின் இந்த சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளர்.

புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிர மணியர் கோயிலில் நேற்று நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் தமது வழிபாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

“உலகத்தில் எல்லா இடங்களிலும் கோயில்கள் கட்டி, இந்து விழாக்களைக் கொண்டாடுவது அவ்வளவு சுலபம் இல்லை. இங்கு அந்த உரிமையை அரசாங்கமும் சமூகமும் பாதுகாக்கிறது,” என்று குறிப்பிட்டார் அமைச்சர்.    

நியூசிலாந்திலும் நெதர்லாந்திலும் நிகழ்ந்த அண்மை சம்பவங்களையும் அதைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் பழிவாங்கும் நோக்கம் கொண்ட தாக்குதலுக்கான  கோரிக்கைகளையும் சுட்டிய அமைச்சர் சண்முகம்,  “உலகமெங்கும் இத்தகைய சம்பவங்கள் வழக்கமாகி வருகின்றன. சிங்கப்பூரில் இதைத் தவிர்க்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கவேண்டும்,” என்றார் அவர். 

நியூசிலாந்தின் தீவிரவாத சம்பவத்திற்கு பின் அந்நாட்டு மக்களும் அரசாங்கமும் முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைத்தது சிறப்பானது என்று குறிப்பிட்ட அமைச்சர் சிங்கப்பூரில் சிறுபான்மையினர் பாதுகாப்பு, சமய சுதந்திரம், வெறுப்புணர்வு பிரசாரத் தடுப்பு ஆகியவைத் தொடர்ந்து நிலைத்திருக்க முயற்சி எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.   

மேள, தாள இசையுடன் கோலாகலமாக நடந்தேறிய பங்குனி உத்திரத் திருவிழாவில் மொத்தம் ஏறத்தாழ 8,000 பக்தர்கள் கலந்துகொண்டர். 1,740 பால் குடங்கள், 159 அலகுக் காவடிகள், 26 ரதக் காவடிகள், 96 பால் காவடிகள் உட்பட ஏறக்குறைய 6,000 பக்தர்கள் திரளாக விழாவில் பங்கேற்றனர்.

காவடி ஊர்வலம் சுமூகமாக நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட 150 தொண்டூழியர்கள் சேவையாற்றினர். பாதையைச் சுமூகமாக கடக்க பல வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது என்று பக்தர் திரு ஜெயராம் சுப்பையா கூறினார். 

மதிய நேரத்தில் பக்தர்கள் கடுமையான வெயிலில் ஊர்வலப் பாதையைக் கடக்க வேண்டியிருந்தது. அதுபோக ஊர்வலப் பாதையில் சிலர் புகைபிடித்துக் கொண்டிருந்தனர். சிலர் வரிசையில் வராமல் இடையில் புகுந்தனர். 

“இம்முறை கூட்டம் அதிகமாக இருந்தது. காவடிப் பாதையின் இறுதிக் கட்டத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் அங்கு போதுமான அளவிற்கு தண்ணீரும் உணவும் பக்தர்களுக்கு இல்லை. நேரடி இசையும் தரமாக இருக்கவில்லை, சில வேளைகளில் சினிமாப் பாடல்கள் வாசிக்கப்பட்டன,” என்றார் திருமதி விக்னேஸ்வரி ரெத்தினம், 38. 

காவடி சுமந்த பக்தர்களில் ஒருவரான திரு பால முருகன், 39. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக பங்குனி உத்திர திருவிழாவில் காவடி ஏந்தி வருகிறார். 

“சென்ற ஆண்டு இரண்டு மணி நேரத்துக்குள் காவடி ஏந்தி வந்து நேர்த்திக் கடனை முடித்துவிட்டேன். இம்முறை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எடுத்தது. காவடியைத் தயார்படுத்தும் இடத்திலும் காவடியை இறக்கி வைக்கும் இடத்திலும் கூட்ட நெரிசல் இருந்தது,” என்றார் அவர். 

தன் 8 மாத குழந்தைக்கு நேற்றைய விழாவில் முடி இறக்கினார் திருமதி சந்தியா தேவி, 34. வழிபாட்டுக்கும் முடிக் காணிக்கைக்கும்  ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன என்று அவர் தெரிவித்தார்.  

காலை 5.30 மணிக்கு தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழா இரவு 11.30 மணிக்கு நிறைவடைந்தது.