முஸ்லிம்கள் மற்ற சமயத்தவர்களுடன் நல்லிணக்கத்தைத் தொடர வலியுறுத்து

முஸ்லிம்கள் மற்ற சமயத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்ந்து நல்லிணக்கத்துடன்  இணைந்து வாழவேண்டும் என்று சிங்கப்பூரின் ‘இமாம்’ எனப்படும் இஸ்லாமிய சமயத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த தாக்குதல் குறித்து அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.  ஐம்பது பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை “துயரச் சம்பவம்” என்று வர்ணித்த சமயத் தலைவர்கள் வெள்ளிக்கிழமையன்று ( மார்ச் 22) சிங்கப்பூரிலுள்ள 70 பள்ளிவாசல்கள் அனைத்திலும் பிரசங்க உரையை ஆற்றினர். சகிப்பின்மை, வெறுப்பு மிகுந்த கொள்கைகளால் ஏற்படும் ஆபத்துகளை இந்தச் சம்பவம் நினைவூட்டுவதாக இமாம்கள் தெரிவித்தனர்.

“மனதையும் சிந்தையையும் தூய்மைப்படுத்துதல், கட்டிக்காத்தல், பாதுகாத்தல் ஆகியவை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த எங்களின் கடமைகளாகும்,” என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தயாரித்துள்ள பிரசங்க உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மற்றவர்கள் மீதான வெறுப்பு, பகைமைப்போக்கு ஆகியவற்றுக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. அமைதியும் நல்லிணக்கமும் பின்பற்றும் சிங்கப்பூரின் மரபை நாம் தொடர்வோம்,” என்று அந்த உரை குறிப்பிடுகிறது.

தாக்குதலை நடத்திய துப்பாக்கிக்காரனின் செயலைக் கண்டித்த இமாம்கள், அவன் ஒற்றுமையைத் தரைமட்டமாக்க முயல்வதாகத் தெரிவித்தார். “ரத்தம் சிந்தவேண்டும் என்ற வெறியில் இத்தகையோர் பல இனங்களையும் சமயங்களையும் சேர்ந்த மக்களின் நல்லிணக்கத்தைக் குலைக்க முற்படுகின்றனர். உயிர் மீதான மதிப்போ, வழிபாட்டுத் தலங்களின் மீதான மதிப்போ, ஏன் சமயங்களின் மீதான மதிப்பு கூட அவர்களுக்கு இல்லை,” என்று அவர்கள் போதித்தனர். அதே வேளையில் மன்னிப்பின் முக்கியத்துவத்தையும் இந்த இமாம்கள் வலியுறுத்தினர். தங்களது குடும்பத்தினரைக் கொன்ற துப்பாக்கிக்காரனிடம் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு தெரிவித்ததை அவர்கள் சுட்டினர். ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றின் உச்சம் இதுவே என்று அவர்கள் தெரிவித்தனர். “மனதில் துயரமும் கோபமும் நிரம்பினாலும் தன்னைப் புண்படுத்தியவர்களிடம் காட்டப்படும் மன்னிப்பு, அனைத்து குண்டுகளையும் விட சக்தி வாய்ந்தது,”என்றனர் அந்த இமாம்கள். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon