அரசு உறுதி: தமிழ் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாகத் தொடரும்

தமிழ்மொழி விழாவின் நிகழ்ச்சிகள் ஒவ்வோர் ஆண்டும் தரத்திலும் புத்தாக்கத்திலும் மேம்பட்டு வருவதாகக் கூறினார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன். இளையர்களின் ஈடுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறிய அமைச்சர், சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலத்திற்கு இது நல்ல அறிகுறி என்றார். பதின்மூன்றாவது முறையாக நடைபெறும் தமிழ்மொழி விழாவின் தொடக்க விழாவில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பேசினார். 

“தமிழ், சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று என்பதில் அரசாங்கத்துக்கு எப்போதும் உறுதியான கடப்பாடு உண்டு,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  “அதைக் கொண்டுதான் பல்வேறு வழிகளிலும் எல்லா இடங்களிலும் வசதிகளை உண்டாக்குகிறோம். தாய்மொழி கள் தொடர்ந்து சிறந்து விளங்கும். அதுவே நம் அடையாளத்துக்கு நல்ல அடித்தளம்,” என்றும் கூறினார் திரு ஈஸ்வரன்.
வசந்தம் ஒளிவழியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட ‘தமிழே வணக்கம்’ நிகழ்ச்சியுடன் இவ்வாண்டின் தமிழ் மொழி விழா தொடங்கியது.
ஆடல், பாடல், கவிதை, தமிழ் இலக்கணங்களுக்கான விளக்கம், நகைச்சுவை என பல அம்சங்களையும் இணைத்து சுவாரசியமான வகையில் தமிழ்மொழி விழா நிகழ்ச்சி அமைந்தது. 

சிங்கப்பூரிலுள்ள 43 தமிழ் சமூக அமைப்புகள் மொத்தம் 46 நிகழ்ச்சிகளை அடுத்த சில வாரங்களில் நடத்தவிருக்கின் றன. இவ்வாண்டு சமூக ஊடகங்களில் தமிழ்மொழி விழா குறித்த தகவல்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன என்று சுட்டிக் காட்டினார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர் ராஜாராம். 
சமூக அமைப்புகளை ஒன்றி ணைத்து தமிழ்மொழி விழாவை ஏற்பாடு செய்யும் வளர்தமிழ் இயக்கத்தில் அதிக இளம் உறுப்பினர்கள் சேவையாற்று கின்றனர் என்றும் அவர்களின் துடிப்பான முயற்சியையும் புத் தாக்கச் சிந்தனையையும் கொண்டு இளையர்களை தமிழ் மொழி விழா நிகழ்ச்சிகளுக்கு ஈர்க்க பல முயற்சிகள் எடுக் கப்படுவதாக அவர் கூறினார். 

அனைத்து வயதினருக்கும் ஏற்ப நிறைய நிகழ்ச்சிகள் இருப் பதைச் சுட்டிக்காட்டிய திரு ராஜாராம், அனுபவம் வாய்ந்த அமைப்புகள் இளையர்களை முன்னிறுத்தி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன என்றார்.  உதாரணத்துக்கு, தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்யும் தமிழ் சமூக சான்றோர்களைப் பற்றிய ‘தமிழவேள் முப்பெரும் விழா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முழுவதும் இளையர்களே பேசுகின்றனர் என்று குறிப்பிட்டு அந்த முயற்சியை வரவேற்பதாகக் கூறினார் அவர். 

மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சி களில் கலந்துகொண்டால் தமிழ் ஆர்வம் வளர்வதோடு சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறினார் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயர். 
சமூகத் தலைவர்கள், பொது மக்கள் என சுமார் 800 பேர் நேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.