சுடச் சுடச் செய்திகள்

கேள்விக்குறியாக உள்ள சீனாவின் தொழிற்சாலை, வேலையிடப் பாதுகாப்பு

அண்மை சில வாரங்களாக சீனாவின் தொழிற்சாலைப் பகுதிகளில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவங்களால் அந்நாட்டில் வேலையிடப் பாதுகாப்பு பற்றிய குறைகூறல்கள் எழுந்துள்ளன. யான்செங் நகரிலுள்ள இரசாயன ஆலை ஒன்றில் மார்ச் 21ஆம் தேதி ஏற்பட்ட வெடிப்பில் 78 உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் கடுமையாகக் காயமடைந்தனர். இந்த வெடிப்பால் 2.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக சீனாவின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

2015ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு சம்பவத்தில் 173 பேர் மாண்டனர்.

இத்தகைய சம்பவங்கள் நடந்திராமல் இருப்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று சீனப் பிரதமர் சீ ஜின்பிங் கூறினார். ஆனால் அவர் அவ்வாறு கூறி பத்து நாட்களுக்குப் பிறகு வாகனப் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் மற்றொரு வெடிப்பு ஏற்பட்டது. யான்செங் நகருக்கு அருகே நடந்த அந்தச் சம்பவத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

சீன நிறுவனங்கள் பலவும், வேலையிடப் பாதுகாப்பை நேர்மையான முறையில் உறுதி செய்யவில்லை என்று ‘பெய்ஜிங் நியூஸ்’ நாளிதழின் தலையங்கக் கட்டுரை குற்றம் சாட்டியது. “சம்பவங்கள் நடந்த பிறகு அங்கங்கு இருக்கும் ஓட்டைகளை அடைப்பதாலும் நிறுவனங்கள் செயல்படும் விதத்தை முற்றிலும் மாற்றியமைக்கத் தவறுவதாலும் மறைந்திருக்கும் ஆபத்துகள் மறையாது,” என்றது அந்தக் கட்டுரை.

பாதுகாப்பான, உயர்தரமான வேலையிடச் சூழலை உருவாக்க பெய்ஜிங் முயன்றாலும், தொழிற்சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. ஏப்ரல் 2015 முதல் சீனாவில் கிட்டத்தட்ட 206 வேலையிட வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஊழியர்களின் உரிமைகளுக்குக் குரல்கொடுக்கும் அரசாங்கச் சார்பற்ற அமைப்பான ‘சீனா லேபர் புல்லடின்’ (சிஎல்பி) தெரிவித்தது.  இருந்தபோதும் நிலக்கரிச் சுரங்கம் போன்ற மிக ஆபத்தான துறைகள் மந்தமடைந்து வருவதால் அண்மை ஆண்டுகளில் சீனாவின் ஒட்டுமொத்த வேலையிட மரண எண்ணிக்கை குறைந்து வருவதாக ‘சிஎல்பி’ அமைப்பைச் சேர்ந்த திரு ஜெஃப்ரி குரொத்தல் தெரிவித்தார்.

“வேலையிடப் பாதுகாப்புக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை சீனா கொடுப்பதில்லை,” என்று கூறிய திரு குரொத்தல், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய உள்ளூர் அதிகாரிகளுக்கு நிறுவனங்கள் கையூட்டு கொடுப்பது வழக்கம் என்றும் தெரிவித்தார். 

சீனாவின் வளர்ச்சி விகிதம் மெதுவடையும் நேரத்தில் பாதுகாப்புச் சோதனைகளுக்காக நிறுவனங்களை மூடக் கட்டாயப்படுத்துவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக ‘கிரீன்பீஸ்’ சுற்றுப்புற ஆர்வல அமைப்பு தெரிவித்தது. பிரச்சினையுள்ள நிறுவனங்கள் எச்சரிக்கப்பட்டபோதும் பிரச்சினைகளைச் சரிசெய்யும் வலுக்கட்டாயத்திற்கு நிறுவனங்கள் உள்ளாவதில்லை என்று ‘கிரீன்பீஸ்’ அமைப்பின் கிழக்காசிய திட்டங்களின் நிர்வாகி ஏடா கோங் தெரிவித்தார்.  இருந்தபோதும் இந்நிலைமை மாறும் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்தனர். பொருளியல் முன்னேற்றம் அதிகரித்துவருகையில், வேலையிடங்களில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதும் இதனால் பாதுகாப்பு விதிமுறைகளைச் செயல்படுத்த அரசாங்கம் அதிக நெருக்குதலுக்குள்ளாகும் என்பதும் அவர்களின் கருத்து. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon