ஒன்று கலந்த நெஞ்சங்கள் வசந்த வாழ்வில் தஞ்சம்

உயிருள்ளவரைக்கும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, மதித்து நடந்து, நலம் பேணி, இணைபிரியாது, உண்மையாக வாழ்க்கை நடத்துவோம் என்று வேலப்பன்- சாவித்ரி தம்பதியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இவர்களின் 15 ஆண்டுகால நட்பு நேற்று திருமணத்தில் முடிந்தது. இதுநாள் வரை ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வந்த 71 வயது திரு வேலப்பன் வெள்ளையனும் 72 வயது திருவாட்டி சாவித்திரி காளியப்பனும் ஏறத்தாழ 120 பேர் முன்னிலையில் மணமுடித்துக்கொண்டனர். 

ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்ல வரலாற்றிலேயே முதன்முறையாக நேற்று இல்லவாசி ஒருவரின் திருமணம் நடந்தேறியதால் அவ்விடமே கல்யாணக் களைகட்டியது. 

தாதிமை இல்லப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள், இல்லவாசிகள், சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள் என வந்திருந்தோர் அனைவரும் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த வாழ்த்து அட்டையில் மன மகிழ்வோடு தங்களது வாழ்த்துச் செய்திகளை எழுதினர்.

“இது சிங்கப்பூருக்கே உரிய கதை. 2004ஆம் ஆண்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குச் சென்று இருந்தபோது சிறு வயதில் அறிமுகமான இருவரும் மீண்டும் சந்தித்தனர். பின்னர் காப்பி குடிக்கச் சென்றனர். அதுமுதலே அவர்களின் நட்பு மலரத் தொடங்கியது,” என புதுமணத் தம்பதியின் கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார் மணவிழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம். 

“தாதிமை இல்ல ஊழியர்கள் சேர்ந்து தாலிச் சங்கிலியை வாங்கிக்கொடுத்துள்ளது மனதை நெகிழ வைக்கிறது,” என்றார் அமைச்சர். 

மணப்பெண் அலங்காரம், புகைப்படம், திருமண கார், விருந்து, தாலி, மோதிரங்கள் என திருமண ஏற்பாடுகளுக்கு பல தரப்பினரும் கைகொடுத்தனர்.

“தாதிமை இல்லத்தின் வாசல் அருகே அமர்ந்து புன்சிரிப்புடன் அனைவரையும் வரவேற்கும் பிரதான வரவேற்பாளரை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்போகிறோம். இது போன்று இல்லவாசியின் திருமணம் என்ற ஒரு நிகழ்வு நடைபெற்றதாக நான் அறிந்ததே இல்லை. இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று கூறினார் தாதிமை இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு தேவேந்திரன்.

ஓய்வுபெற்ற மேஜர் தனசீலன், அவ்விருவருக்கும் பதிவுத் திருமணத்தைச் செய்துவைத்தார். பின் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அதன் பின்னர் சாவித்ரியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டார் திரு வேலப்பன். 

“எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல ஆண்டுகளுக்குப் பின்னர் வீட்டிற்குச் செல்லப் போகிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகளாக இங்கு இருந்துள்ளேன். எனது சக இல்லவாசிகளை விட்டுப் பிரியவிருக்கிறேன்,” என்று சோகம் கலந்த குதூகலத்துடன் திரு வேலப்பன் கூறினார்.

“அடிக்கடி இங்கு வந்து அனைவரையும் சந்தித்துச் செல்வேன்,” என்றார் அவர். 

“புதுவாழ்வு தொடங்குவதற்கு முழுமுதல் காரணமாக இருந்த ஸ்ரீ நாராயண மிஷனுக்கு நான் நன்றி கூறவேண்டும். எல்லா ஏற்பாடுகளையும் எங்களுக்காகச் செய்து கோலாகலமாக நடத்தி வைத்துள்ளனர். நான் சாதாரணமாக பதிவுத் திருமணம் செய்து அவரை வீட் டிற்கு அழைத்துச் செல்ல முடிவுசெய்திருந்தேன்,” என்றார் திருமதி சாவித்ரி. 

சமூகத்தின் ஆதரவையும் அரவணைப்பையும் பிரதிபலிக்கும் அற்புதமான நிகழ்வு இது என்றார் நீ சூன் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் பேராசிரியர் ஃபைசால் இப்ராஹிம்.