'சும்மா செஞ்சு முடி' - 'நைக்கி' தமிழ் 

தமிழ் வார்த்தைகள் கொண்ட 'நைக்கி' டி-சட்டைகள் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளன. சாங்கியின் புதிய கவர்ச்சியான ஜுவல் நிலையத்தின் 'நைக்கி' கடைத்தொகுதியில் இந்த டி-சட்டைகள் கிடைக்கின்றன. கருப்பு, வெள்ளை இரு நிறங்களிலும் கிடைக்கும் இந்த டி-சட்டைகளில் தமிழ் தவறாக இருப்பதாக இணையத்தில் சர்ச்சை கிளம்பியது. ஆனால் அவை விற்பனைக்கு வைக்கப்பட்ட டி-சட்டைகள் அல்ல.

அவை முன்னதாக வெளியிடப்பட்ட மின் - அறிக்கையில் இடம்பெற்ற படங்கள் என்று தமிழ் முரசு அறிகிறது.

இன்று ஜுவல் சாங்கியில் உள்ள 'நைக்கி' கடையில் விற்கப்படும் டி-சட்டைகளிலோ 'சும்மா செஞ்சு முடி' என தெளிவான தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது.

டி-சட்டைகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் சரியாக அச்சிடப்பட்டிருந்தாலும் அது 'ஜஸ்ட் டூ இட்' எனும் முழக்கவரிக்கான சரியான மொழிபெயர்ப்பா எனும் புதிய சர்ச்சை இணையத்தளங்களில் கிளம்பியுள்ளது.

'ஸ்ட்ரேட்டோஸ்ஃபியர்' எனும் இணையத்தளம் ஜுவல் சாங்கியில் திறக்கப்படவுள்ள புதிய 'நைக்கி' கடை பற்றி செய்தியையும் படங்களையும் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் 'நைக்கி'யின் முழக்கவரியான 'ஜஸ்ட் டூ இட்' (Just Do it) ஆங்கிலம் தவிர, சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.  அதில் தமிழ் வரிகள் புரியாத வகையில் அச்சிடப்பட்டிருந்தன.