இந்தியாவில் 2வது கட்ட பொதுத்தேர்தல்

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்தியாவின் இரண்டாவது கட்ட பொதுத் தேர்தல் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டத்தில் 155 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

இந்திய நாடாளுமன்றத்தில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழகத்திலும் கர்நாடகாவிலும் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் மும்முரமாக முயன்று வருகின்றன. இவ்விரு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் அதனுடன் கூட்டணி அமைத்த கட்சிகளும் வெற்றியடைந்தால் மத்திய அரசில் பாரதிய ஜனதா அல்லாத அரசாங்கம் அமைய வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த வாரம் தொடங்கிய பொதுத்தேர்தல் அடுத்த மாதம் நிறைவடையும். இதில் 900 மில்லியன் பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மே 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.