பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய இலங்கை தொடர் குண்டு வெடிப்புகள்

  • 10 நாட்களுக்கு முன்பே இலங்கை போலிஸ் படைத் தலைவர் எச்சரிக்கை
  • பாதுகாப்புக் கருதி பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடல்
  • ரத்த தானம் செய்ய முன்வரும் இலங்கை மக்கள்
  • எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள்
  • மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்கள் அரசாங்கச் செலவில் நல்லடக்கம்
  • வீட்டில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு

கொழும்பு: இலங்கையில் பலரின் உயிரைப் பறித்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல் என்று இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கூறினார். பயங்கரவாதச் செயலுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்பார்கள் என்றும் அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் உள்ள தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம் தொடர்பு கொண்டு அங்குள்ள சூழ்நிலையைக் கேட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறியுள்ளார்.
அந்தத் தாக்குதல்கள் பயங்கர மானது என்றும் அர்த்தமற்ற சோக நிகழ்வு என்றும் மலேசிய முன்னாள் துணைப் பிரதமரும் கெஅடிலான் கட்சித் தலைவருமான அன்வார் இப்ராஹிம் கூறினார்.


திரு அன்வாரின் மனைவி வான் அசிசாவும் இலங்கையில் நடந்த தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா ஆதரவாக இருக்கும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன் கூறியுள்ளார். இலங்கையில் நடந்த கொடூரத் தாக்குதல்களுக்கு நியூசிலாந்து, பிரிட்டன், ஜெர்மனி, ஆப்கானிஸ்தான், ஜோர்தான் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செயல்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே குறிப் பிட்டுள்ளார். இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் குறித்து அதிர்ச்சி கொள்வதாக ஜெர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஈஸ்தர் தினமான நேற்று 8 இடங்களில் அடுத்தடுத்துக் குண்டு கள் வெடித்ததில் குறைந்தது 207 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்ததாகவும் இலங்கை அதிகாரிகள் கூறினர்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் அங்குள்ள மக்கள், பாதிரியார்கள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள நிருபர் ஒருவர் கூறியுள்ளார்.


கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் பாதிரியார்கள் சிலரிடம் பேசிய பிபிசி செய்தியாளர் ஒருவர், அதிர்ச்சியில் அவர்களால் அந்தச் சம்பவம் பற்றி எதுவும் கூற முடியவில்லை என்று கூறினார். 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய மோசமான சம்பவத்தை இலங்கை மக்கள் பார்த்ததில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இலங்கை மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
குண்டு வெடிப்புத் தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது இன்னும் கண்டறியப் படவில்லை. குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் குறைந்தது 35 பேர் வெளிநாட்டினர் என்று காவல்துறையினர் கூறினர்.


10 நாட்களுக்கு முன்பே இலங்கை போலிஸ் படைத் தலைவர் எச்சரிக்கை


இலங்கையில் நேற்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன்பே தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இலங்கையில் தாக்குதல் நடத்தக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்றும் இலங்கை போலிஸ் படைத் தலைவர் எச்சரித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத மிரட்டல் குறித்துக் கடந்த 11ஆம் தேதியே போலிஸ் படைத் தலைவர் ஜெயசுந்தரா, உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்தியத் தூதரகம் போன்ற இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த என்டிஜே என்படும் இலங்கையில் உள்ள தீவிரவாத முஸ்லிம் குழு திட்டமிட்டிருப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக உளவுத் துறை தெரிவித்திருந்தது.

பாதுகாப்புக் கருதி பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடல்

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்புக் கருதி அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் புதன்கிழமை வரை மூடப்படும் என்று இலங்கைக் கல்வி அமைச்சர் அகில விராஜ் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டிசில்வா குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்குத் தொடர்ந்து விடுதிகளில் தங்கியிருக்க முடியும் எனவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரத்த தானம் செய்ய முன்வரும் இலங்கை மக்கள்

கொழும்பு உட்பட 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரத்த தானம் செய்ய இலங்கை மக்கள் பலர் ஆர்வத்துடன் முன்வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரத்ததானம் தேவைப்படுவதாகவும் ஏராளமான மக்கள் ரத்ததானம் கொடுத்து வருவதாகவும் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள்

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்க்கொழும்பு, கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சியோன் தேவாலயம், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிகல் இன், தெமட்டகொடை மகவில பூங்கா, ஆகிய 8 இடங்களில் நேற்று குண்டுகள் வெடித்தன.


மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்கள் அரசாங்கச் செலவில் நல்லடக்கம்

மட்டக்களப்புச் சியோன் தேவால யத்தில் நேற்று குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டவர் கள் அரசாங்க செலவில் நல்லடக் கம் செய்யப்படுவர் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க உயர் அதிகாரி மா. உதயகுமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த அந்தத் துயரச் சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாகக் கூறிய உதயகுமார், குண்டு வெடிப்பில் இறந்தவர் களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இணைங்கியிருப்பதுடன் அவர்களின் குடும்பத் திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படயிருப்பதாகவும் கூறி னார். முதற்கட்டமாக 60,000 ரூபாயும் இரண்டாம் கட்டமாக 40,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
மட்டக்களப்பு தேவாலய குண்டு வெடிப்பில் 14 குழந்தை கள், 7 பெண்கள் உட்பட மொத் தம் 26 பேர் உயிரிழந்தனர். மட்டக்களப்பு நகரையும் தேவாலயங்களையும் பாது காப்பதற்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

வீட்டில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு


தெமட்டகொடை பகுதியில் குண்டுகள் வெடித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வெடி பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். அந்த வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் அதிரடிப் படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புப் படை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!