சுடச் சுடச் செய்திகள்

துணைப்பிரதமராகும் ஹெங் சுவீ கியட்

நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் மே 1ஆம் தேதி முதல் துணைப் பிரதமராகப் பதவியேற்பார். சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக அவர் பதவியேற்பதற்கான சாத்தியத்தை இது மேலும் உறுதி செய்கிறது. தற்போதைய துணைப் பிரதமர்கள் திரு டியோ சீ ஹியன்னும் திரு தர்மன் சண்முகரத்தினமும் தங்களது பதவியை துறப்பதுடன் மூத்த அமைச்சர்களாக அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்றுவர் என்று பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்தது.

திரு ஹெங் நிதியமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றுவார். எதிர்கால பொருளியல் மன்றத்திற்கும் தேசிய ஆய்வு அறக்கட்டளைக்கும் அவர் தலைவராக நீடித்திருப்பார். மேலும், பிரதமர் லீ சியன் லூங் விடுப்பில் இருக்கும்போது திரு ஹெங் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார் என்று பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிடுகிறது.திரு டியோ தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகத் தொடர்ந்து இருப்பார். திரு தர்மன், சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக நியமிக்கப்படுவார். பிரதமருக்குத் திரு தர்மன் தொடர்ந்து பொருளியல் ஆலோசனை அளிப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

தற்போது நடைபெற்றுவரும் தலைமைத்துவப் புதுப்பிப்பில் இந்த மாற்றங்கள் அங்கம் வகிப்பதாகப் பிரதமர் லீ ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

“அடுத்த தலைமுறை தலைமைத்துவம் உருவெடுத்து வருகிறது. எனக்கும் வயதில் முதிர்ந்த எனது சகாக்களுக்கும் அடுத்து இவர்கள் கட்டங்கட்டமாகப் பொறுப்பேற்கின்றனர். இந்தக் குழு அணுக்கமாக இணைந்து செயல்பட்டு மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் படிப்படியாகப் பெற்று வருகிறது,” என்று திரு லீ தமது பதவில் எழுதினார்.

“இவர்களை ஆதரிக்கவும் சிங்கப்பூருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்ய ஒன்றாக செயல்படவும் நான் எல்லா சிங்கப்பூரர்களையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று நடந்த பொதுத்தேர்தல் முதல் இன்று வரை அமைச்சரவை மாற்றங்கள் நான்கு முறை நிகழ்ந்துள்ளன. அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் நிகழும் கடைசி அமைச்சரவை மாற்றமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவான செய்திகள், நாளைய தமிழ் முரசு இதழில்!

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon