ஊழல் புகார்கள் குறைவு மேலும் ஓர் அனுகூலம்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் புதிய ஊழல் விவகாரங்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 132 ஆகக் குறைந்தது. வந்த புகார்கள் அதிகம் என்றாலும் ஆதாரம் இல்லாமல் புலன்விசாரணையைத் தொடங்கும் அளவுக்குப் போதிய முகாந்திரம் இல்லாமல் இருந்தவை அவற்றில் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் அதிகம் நிலவும் ஒரு வட்டாரத்தில் அமைந்து இருந்தாலும் உலகிலேயே லஞ்ச லாவண்யங்களும் ஊழலும் குறைந்த நாடு என்று ஏற்கெனவே நற்பெயரைப் பெற்று இருக்கும் சிங்கப்பூருக்கு இது உண்மையிலேயே அதன் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாகவே ஒளிவிடுகிறது. சிங்கப்பூருக்கு மட்டுமின்றி பெரும் பணத்துடன் தொழில்களில் முதலீடு செய்யப் பரிசீலிக்கும் உலக முதலீட்டாளர்களுக்கும் உலகச் சுற்றுப் பயணிகளுக்கும் இந்தச் செய்தி அவர்கள் விரும்பும் ஒரு வரவேற்புச் செய்தியாகவேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிங்கப்பூர் பொதுவாகவே ஊழலை விரும்பாத, அதைச் சகித்துக்கொள்ளாத ஒரு நாடு என்பது அதன் சுதந்திரத்திலிருந்தே உலகம் அறிந்த ஒன்று. நவீன சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் இயூவும் அவரின் சகாக்களும் முதலும் முடிவுமாக ஒழியவேண்டியது ஊழல் என்று முடிவு செய்து, அதைப் புலப்படுத்தும் வகையில் வெள்ளை உடையைத் தங்களின் அடையாளமாக, நாட்டின் அடையாளமாக உலகுக்குக் காட்டினார்கள்.

திரு லீ குவான் இயூ இன்று இல்லை என்றாலும் ஊழலுக்கு எதிரான அவரின் உறுதி, அரசாங்கத் தலைவர் களிடையே, அரசாங்கம், தனியார் துறைகளின் ஊழியர் களிடையே, முதலாளிகளிடையே, மக்களிடையே இன்று இன்னும் வலுவாக நிலைப்பட்டு இருப்பதற்கு இதுவே காரணம். இதைத்தான் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிங்கப்பூரில் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் இருக்கின்றன. அரசாங்கத் துறை, தனியார் துறை எதில் ஊழல் புகார் கிளம்பினாலும் அது பற்றி சிங்கப்பூர் ஊழல் புலன்விசாரணை இலாகா (CPIB) என்ற அமைப்பு விசாரணை நடத்துகிறது.

பிரதமர் அலுவலகத்தில் அமைந்து இருக்கும் இந்த அமைப்பு யாரையும் அதிபரின் அனுமதியுடன் பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் இடம்பெற்று இருக்கும் குற்றவியல் விவ காரங்களையும் இது விசாரிக்கும். ஊழல் ஒழிப்புச் சட்டங் களைத் திறம்பட அமலாக்கும் வகையில் இந்த அமைப்பு சுதந்திரமான அமைப்பாக வைக்கப்பட்டுள்ளது. 'டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல்' என்ற உலக அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளில் ஊழல் எப்படி இருக்கிறது என்பதைப் பட்டியலிடும். சென்ற ஆண்டில் 168 நாடுகளை அலசி ஆராய்ந்து அது வெளியிட்ட பட்டியலில் சிங்கப்பூர் 85 மதிப்பெண்களுடன் ஊழல் குறைந்த நாடுகளில் உலகிலேயே எட்டாவது இடத்தையும் தென்கிழக்கு ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

இதற்கு சிங்கப்பூர் ஊழல் புலன்விசாரணை இலாகா வின் ஆற்றல்மிக்க செயல்பாடுகளும் காரணம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இந்த இலாகாவின் கண்காட்சியை சில நாட்களுக்கு முன் தேசிய நூலகத்தில் திறந்துவைத்துப் பேசிய பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூரில் ஊழல் குறைந்து இருப்பதற்கு வலுவான அரசியல் தலைமைத்துவம், துடிப்புடன் செயல்படுகின்ற, பரந்த அளவிலான ஊழல் எதிர்ப்பு ஏற்பாடு, ஊழலைச் சகித்துக்கொள்ளாத சமூகம் ஆகிய முன்றும் முக்கிய காரணங்கள் என்றார்.

இந்த மூன்றும் முன்பைவிட இப்போது இன்னும் வலுவாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் லஞ்சம், ஊழல் என்பது மனித இயல்பு என்பதாலும் மனிதனின் ஆசைக்கு அளவில்லை என்பதாலும் சிங்கப்பூரில் ஊழலை நூற்றுக்குநூறு நிரந்தரமாக அகற்றிவிடலாம் என்பது நடக்காத காரியம் என்று பிரதமர் தெரிவித்து இருப்பதை எண்ணிப் பார்த்து, சிங்கப்பூருக்குள் ஊழல் என்ற புற்றுநோயை நுழைய விடமாட்டோம் என்று எல்லாரும் உறுதிபூண்டால் லஞ்ச லாவண்யம், ஊழல் அற்ற நாடாக தொடர்ந்து நாம் உலகில் மிளிரலாம்.

ஊழல் என்றால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க சிங்கப்பூர் தயங்குவதில்லை. அண்மையில் பனாமா அறிக்கை கசிவு இடம்பெற்ற உடனேயே "சிங்கப்பூரில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சிங்கப்பூர் அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!