அஞ்சோம், ஆயத்தமாவோம்

உலகில் ஒடுக்க முடியாத அளவுக்கு பயங்கரவாதம் உறுதி யாகிவிடுமோ என்ற அச்சம் தலைதூக்கிவிட்டது. பயங்கர வாதத்தின் வடிவமும் பலவகையாக உருமாறிவிட்டன. இன்னமும் உருமாறி வருகின்றன. எந்த நாட்டில் அது எந்த வடிவத்தை எடுக்கும், எந்த வகையில் தலை எடுத்து ஆடும் என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு இப்போது உலக பயங்கரவாதச் சூழல் இருக்கிறது. 'ஐஎஸ்' அமைப்பு போன்றவை அதிநவீனமானவையாக வும் எங்கும் ஊடுருவும் தன்மை கொண்டவையாகவும் இருப்பதை அப்போதைக்கு அப்போது உலகில் அங்கும் இங்கும் எங்கும் அவை வெளிப்படுத்தி வருகின்றன.

தனக்கென்று கோட்பாடுகளை, கொள்கைகளை வகுத்துக்கொண்டு, சமயப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, அவை வல்லரசுகளையும் தாக்குகின்றன. ஒதுங்கி இருக்கும் அமைதி விரும்பி நாடுகளிலும் அவை கைவரிசை காட்டுகின்றன. அவற்றின் இரக்கமற்ற கைகளுக்கு எட் டாத இடம் என்று உலகில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அத்தகைய இடங்களில் ஒன்று என்று ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது. 'சிங்கப்பூர் தாக்கப்படுவது உறுதி. எப்போது என்பதுதான் கேள்வி' என்று சொல்லப்படும் அளவுக்கு இந்த நாடு பயங்கரவாதிகளின் குறியில் இருக்கிறது.

இன்றைய உலகில் பயங்கரவாதத்தைத் தவிர்க்கும் வகையில் அரண்களை அமைத்துக்கொள்வது எந்த அளவுக்கு முக்கியமோ, பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டால் அதைச் சமாளிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியதும் அந்த அளவுக்கு முக்கியமானதாக ஆகி இருக்கிறது.

அதுவும் சிங்கப்பூர் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, மையமான இடத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கு இது இன்னும் அவசியமானது என்பது திட்டவட்டம்.

சிங்கப்பூர் போன்ற மக்கள் நெருக்கமாக, உயர் மாடி வீடுகளில் வசிக்கின்ற நகர்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாதத்தைச் சமாளிக்க வேண்டிய தேர்ச்சிகள், பயிற்சிகள் எல்லாம் கட்டாயமானவையாக ஆகிவிட்டன.

தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து போன்ற தேவை களைப் போல் மக்களுக்குப் பயங்கரவாதச் சமாளிப்புப் பயிற்சியை அளிக்கவேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்று என்ற நிலை வந்துவிட்டது.

நகர்வாழ் மக்களுக்கு இந்தத் தேர்ச்சியும் தெரிந்திருக்க வேண்டிய நிலையை பயங்கரவாதிகள் உருவாக்கி இருக் கிறார்கள். பொதுவாகவே பயங்கரவாதத்தைக் கிள்ளுக் கீரையாகக் குறைத்து மதிப்பிடும் மனப்போக்கு மக்களிடம் நிலவுவது வழமையானதுதான்.

ஆனால் இதில் அலட்சியம் கூடாது என்பதை அவர் களுக்கு எடுத்துச்சொல்லி பயங்கரவாதச் சமாளிப்பு தேர்ச்சிகளை அவர்களுக்குப் போதிக்க வேண்டிய பொறுப்பு, அந்தந்த அரசாங்கங்களுக்கு இருக்கிறது என்பதால் சிங்கப்பூர் அரசாங்கம் இந்த முயற்சிகளை இப்போது முடுக்கிவிட்டுள்ளது.

தீ விபத்து நிகழ்ந்தால் அதைத் திறம்பட சமாளிப்பது எப்படி-? குற்றவாளிகள் கைவரிசையைக் காட்டினால் அவர் களை மடக்கிப் பிடிப்பது எப்படி என்பதை எல்லாம் மக்களுக்குப் போதிக்க 2003 முதல் இடம்பெற்று வந்த 'அவசர கால ஆயத்த நாள்' செயல் திட்டம் இனிமேல் பயங்கர வாதத்தைச் சமாளிக்கும் பயிற்சிகளில் ஒருமித்த கவனம் செலுத்தப்போகிறது.

இதில் முதலாவதாக சொங் பாங், ஜூரோங் ஸ்பிரிங் ஆகிய இடங்களில் பயங்கரவாத மாதிரிப் பயிற்சிகள் நடக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீவு முழு வதும் பயிற்சிகள் இடம்பெறும். பயங்கரவாதம் அரங்கேற்றப் பட்டால் மக்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும், என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் நடித்துக்காட்டி அதிகாரிகள் மக்களுக்குப் போதிப்பார்கள்.

பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் எப்படி ஓடுவது?, எப்படி பதுங்குவது?, அதுபற்றி அதிகாரிகளுக்கு எப்படி தெரிவிப்பது? என்பதை மக்கள் அந்த மாதிரிப் பயிற்சிகள் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

உலகுக்குக் கதவைத் திறந்துவைத்து நகர வாழ்வை மேற்கொண்டுவிட்ட சிங்கப்பூர் மக்கள், பல தேர்ச்சிகளைக் கற்றுணர்ந்து அவற்றைத் தங்கள் அமைதி, வளப்ப வாழ்வுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொள்ள தயங்கியதில்லை. அதைப் போலவே அவர்கள் இந்த அவசிய, கட்டாய தேர்ச்சியையும் கற்றுக்கொள்ளவேண்டும். அரசாங் கம் நடத்தும் பயிற்சிகளில் ஈடுபாடுகொண்டு அதன் மூலம் அவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க தங்கள் பங்கை ஆற்ற சிங்கப்பூர் மக்கள் முன்வரவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!