நோகாத கண்ணுக்கு மருந்து

வறுமை அல்லது வசதி குறைவு காரணமாக அடிப்படை வசதிகள் கிட்டாமல் எந்த ஒரு சிங்கப்பூரரும் அவதிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மக்களுக்குப் பயன்தரக்கூடிய பல உதவித் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் 'சாஸ்' எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டம். இத்திட்டத்தின் மூலம் குறைந்த, நடுத்தர வருமானம் உடைய சிங்கப்பூரர்களும் முன்னோடித் தலைமுறையினரும் அக்கம்பக்கத்திலுள்ள தனியார் மருந்தகங்களில், பல்மருந்தகங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற இயலும். சிகிச்சைக்குரிய மீதக் கட்டணத்தைச் சம்பந்தப்பட்ட மருந்தகங்கள் அரசாங்கத்திடம் மானியமாகப் பெற்றுக்கொள்ளும்.

இந்த 'சாஸ்' திட்டத்தின் மூலம் சென்ற ஆண்டு மட்டும் சுமார் 650,000 சிங்கப்பூரர்கள் பயன்பெற்றனர். இதற்காக $167 மில்லியன் தொகையை அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ளது. சுமார் 1,500 மருந்தகங்களும் பல்மருந்தகங்களும் 'சாஸ்' திட்டத்தில் பங்கேற்று மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றன. பெரும்பாலான மருந்தகங்கள் விதிமுறைகளுக்கு இணங்கி நடந்தாலும் ஒரு சில மருந்தகங்கள் இதில் மோசடி செய்திருப்பது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. சுகாதார அமைச் சின் தணிக்கை மூலமாகவும் நோயாளி ஒருவர் அளித்த புகார் மூலமாகவும் இம்மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

செய்யாத சிகிச்சைக்காக கோரிக்கைகளைத் தாக்கல் செய்து பணம் பெற்றது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி சுகாதார அமைச்சு கடந்த வாரம் இரு பல்மருந்தகங்களுக்கு 'சாஸ்' திட்டத்தில் தொடர்ந்து பங்கேற்க இடைக்காலத் தடை விதித்தது. இப்படி, செய்யாத சிகிச்சைக்காகவும் செய்த சிகிச் சைக்கு ஏற்றவாறு அல்லாமல் கூடுதல் கட்டணத்தைக் குறிப்பிட்டும் பல கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட தாகக் கூறி இன்னும் பல மருந்தகங்கள் விசாரணை வளையத்தில் உள்ளன. நோயாளிகளின் ஒப்புதல் இல் லாமல் அல்லது அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் மெடிசேவ் கணக்கிலிருந்து பணம் பெற்ற சில சம்ப வங்களும் நிகழ்ந்துள்ளன.

மருத்துவம் என்பது சேவையாக இருந்த காலம் போய் இப்போது ஒரு தொழிலாக மாறிவிட்டாலும் செய்யாத சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிப்பது, அதை நோயாளி களிடம் இருந்து பெறாமல் அரசாங்கத்திடம் மானியமாகப் பெற்றாலும் அது 'நோகாத கண்ணுக்கு மருந்திட்டது' போலத்தான்.

மருத்துவத் துறைக்கு இழிபெயரை உண்டாக்கும் இத்தகைய செயல்கள் இனிமேலும் நிகழாமல் இருக்க சிங்கப்பூர் மருத்துவ மன்றமும் சிங்கப்பூர் பல்மருத்துவ மன்றமும் சுகாதார அமைச்சும் போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம். மோசடிகளைக் கண்டறிய அரசாங்கம் தொழில்நுட்பத் தின் துணையை நாடலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப் பிட்ட மருந்தகம், குறிப்பிட்ட ஒரு நோயாளிக்காக 'சாஸ்' மானியம் அல்லது மெடிசேவ் கோரிக்கைகளை அடிக்கடி தாக்கல் செய்யும் பட்சத்தில் அதைத் தரவுப் பகுப்பாய்வு மூலம் கண்டறிந்து தணிக்கை அதிகாரிகளை விழிப்ப டையச் செய்யலாம்.

சிங்கப்பூரர்களும் இதில் தங்கள் பங்கை ஆற்றலாம். தங்களது மருத்துவச் சிகிச்சைக்கு உரிய ரசீதைப் பெற்று, அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சிகிச்சையும் மருந்துகளும் தங்களுக்கு வழங்கப்பட்டனவா என்று சோதிப்பதை அவர்கள் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அத்துடன், 'சாஸ்' இணையத்தளத்தில் 'மைசாஸ்' பக்கத்திற்குச் சென்று தாங்கள் பெற்ற சிகிச்சைக்கு எவ்வளவு மானியம் கோரப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறியலாம். அளிக்கப்படாத சிகிச்சைக்கு மானியம் கோரப் பட்டிருந்தால் அது பற்றி சுகாதார அமைச்சிற்கு அவர்கள் தகவல் தெரிவிக்கலாம்.

மருத்துவர்கள் மீதும் மருத்துவத் துறை மீதும் சமூகத் தில் உயரிய மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட மருத்துவத் துறைக்குக் களங்கம் விளை விக்கும் வகையில் அங்கும் சில களைகள் அவ்வப்போது முளைக்கத்தான் செய்கின்றன. அந்தக் களைகளை முளையிலேயே களைந்து மருத்துவத்தை மகோன்னத சேவையாகத் தொடரச் செய்யும் பொறுப்பு மருத்துவத் துறையினருக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் உண்டு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!