லிட்டில் இந்தியாவில் தேசிய பேரிடரைத் தவிர்க்க...

ஆயகலைகள் அறுபத்து நான்கில் அரிய கலை சமையல் கலை. அதுவும் இந்திய சமையல், குறிப்பாக அறுசுவையும் அடங்கிய தமிழக சமையல் கலை என்பது உலகம் முழுவதும் மணம் பரப்பும் ஒன்று. தன் மக்களை மட்டுமல்லாது மற்றவர்களையும் கவர்ந்து ஈர்க்கும் இந்திய சமையல் மணமும் சுவையும் இப்போது உலகின் பல பகுதிகளிலும் பெரிதும் பரவி இருப்பதற்கு சிங்கப்பூர் முக்கியமான ஓர் அடுப்பங்கரை யாக அன்று முதலே இருந்து வருகிறது.

'லிட்டில் இந்தியாவில்' மணம் பரப்பும் பல இந்திய உணவகங்கள், உலக அளவில் இந்திய அறுசுவையைக் கொண்டு சென்று உலகப் பசியாற்றி வந்துள்ளன, வரு கின்றன. இப்படிப்பட்ட பேரும் புகழும் மணமும் சுவையும் கொண்ட இந்திய உணவகங்களின் வரிசையில் அண்மைய காலமாக புதிய புதிய உத்திகளுடன், புதிய புதிய அணுகுமுறைகளுடன் பல புதிய உணவகங்கள் லிட்டில் இந்தியாவில் தனி சுவை தருகின்றன. சமையல் கலை என்பது சாதாரண கலை அல்ல என்பதால் கைதேர்ந்த நளபாகக் கலைஞர்களையும் பாரம் பரியம் தெரிந்த விருந்தோம்பல் சேவையாளர்களையும் சார்ந்து இருந்து அவர்களை நம்பி தொழில் நடத்த வேண்டிய சூழல், ஒரு கட்டாயம் இந்திய உணவகங் களுக்கு எப்போதுமே உண்டு.

இத்தகைய தேர்ச்சியாளர்களை உள்நாட்டிலேயே பெறுவது என்பது இந்திய உணவகங்களுக்கு குதிரைக் கொம்பாகவே இன்றும் இருந்துவருகிறது. வெளிநாட்டு ஊழியர்களையே அளவுக்கு அதிகமாக நம்பி காலம் தள்ளி வந்துள்ளதால் இந்திய உணவக ஊழியர் அணியில் சிங்கப்பூரர்களின் மூலாதார வளம் போதிய அளவுக்கு இல்லாமல் போய்விட்டது. சிங்கப்பூரர் கள் இன்றி சிங்கப்பூரில் செயல்படும் இந்த நிலை இனியும் நீடிக்க முடியாது; இந்திய உணவகங்கள் தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாக வேண்டும் என்ற கட்டாயம் இப்போது ஏற்பட்டுவிட்டதால் வெளிநாட்டு ஊழியர்களைக் குறைத்துக்கொள்ளவேண்டிய நிலையை யும் அதேவேளையில் சிங்கப்பூரில் நளபாக நாயகர்கள் கிடைக்காத நிலையையும் எதிர்நோக்கி இந்திய உணவ கங்கள் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றன.

இந்தத் தவிப்பில் இருந்து தப்பிக்க அவற்றுக்குள்ள ஒரே வழி, ஊழியர்களைக் குறைத்துக்கொண்டு தொழில் நுட்பத்துக்கு மாறி, இருக்கும் ஊழியர்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதுதான். இந்திய உணவகங்களைப் பொறுத்தமட்டில் இந்த முயற்சியில் தனித்துச் செயல்படுவது என்பது பொருளி யல் ரீதியில் தாங்காது என்பதால் இப்போது பெரிய 8 இந்திய உணவகங்கள் அரிய ஒரு முயற்சியாக ஒன்று சேர்ந்து 'பொது அடுப்பங்கரையை' அமைத்து அதைப் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்துள்ளன. ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டாலும் அந்த அந்த உணவகங்களின் தொழில் ரகசியம் காக்கப்பட்டு அதனதன் சுவை கட்டிக்காக்கப் படும் வகையில் அவற்றுக்கு இடையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் சாப்பாட்டுப் பிரியர்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. துவாசில் அமைந்திருக்கும் அந்தப் பொது இடத்தை அரசாங்க ஆதரவுடன் அமைத்திருக்கும் உணவகங்கள், காய்கறிகளை வெட்டுவது போன்ற பொதுவான வேலை களை ஒன்றாகச் சேர்ந்து செய்து ஊழியர் தேவையை 40% வரை குறைக்கலாம் என்று நம்புகின்றன.

அந்தப் பொது சமையல் அறையைத் திறந்துவைத்த மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே, "இப்படிப்பட்ட ஒரு முயற்சி சரியான இலக்கில் இடம்பெறும் ஒன்று" என்றும் "சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் இந்திய உணவகங் கள் இல்லை என்றால் அது தேசிய பேரிடராக ஆகிவிடும்" என்றும் தெரிவித்து இருக்கிறார்.

அந்தப் பேரிடரைத் தவிர்த்துக்கொள்ள 'தொழிலில் போட்டி, செயலில் கூட்டு' என்ற புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க இந்திய உணவகங்கள் எடுத்துள்ள முடிவு, ஊழியர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும். சிங்கப்பூரில் உணவு, பானத் தொழில்துறை பின்பற்ற வேண்டிய, பின்பற்றக்கூடிய ஒரு முன்னுதாரணமாக இருக்கும். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வளத்தைப் பெருக்கிக்கொள்ள உதவும் ஒரு வழியாகவும் அது திகழும். லிட்டில் இந்தியப் பேரிடரைத் தவிர்த்துக் கொள்ள களம் இறங்கிவிட்ட இந்திய உணவகங்கள் வெற்றி காணப்போவதை நாம் காணப்போவது நிச்சயம். ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுப்போம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!