உரி தாக்குதலுக்கு நரி தந்திரம்

உலகின் தெற்காசியப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா,-பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில், அவை சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதலே காஷ்மீர் பிரச்சினை காரணமாக நல்லுறவு இல்லை. இரு நாடு களும் கடந்த 70 ஆண்டு காலத்தில் நான்கு தடவை போரில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மூன்றுக்கு காஷ்மீர் தான் காரணம். இமயமலைப் பகுதியான காஷ்மீரில் ஏறக்குறைய 43% பரப்பை நிர்வகிக்கும் இந்தியா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை முழுமையாகத் தன்னுடையது என்று கோரு கிறது. காஷ்மீரின் 37% பரப்பை நிர்வகிக்கும் பாகிஸ் தானோ இதை ஏற்க மறுக்கிறது.

ஜம்மு -காஷ்மீர் இந்தியா வசம் இருந்தாலும் அந்த மாநிலத்துக்குத் தன்னாட்சி தேவை என்று பல ஆண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைதான் இந்திய அரசுக்கும் காஷ்மீர் கலவரக்காரர்களுக்கும் இடை யிலான வன்செயல் பிரச்சினையாக இருந்து வருகிறது. கடந்த 1970கள் வரை காஷ்மீரில் ஜனநாயகம் அவ் வளவாக மேம்படவில்லை. இந்திய அரசாங்கம் அங்கு 1988ல் பல ஜனநாயக சீர்த்திருத்தங்களை அமல்படுத்தி யது. ஆனால் அவை எல்லாம் எதிர்விளைவையே ஏற் படுத்திவிட்டன. கடந்த 2014ல் அங்கு நடந்த தேர்தலில் ஜனநாயக ரீதியில் அதிக அளவில் மக்கள் வாக்கு அளித்து புதிய அரசாங்கத்தை அமைத்தபோதிலும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் அங்கு நின்ற பாடில்லை.

கடந்த ஜூலையில் புர்ஹான் வானி என்ற 22 வயது இளைஞனை அரசாங்கப் படைகள் சுட்டுக்கொன்றன. காஷ்மீர் தன் தலையெழுத்தை தானே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் என்று குரல்கொடுத்து சமூக வலைத்தளம் மூலம் ஏராள இளையர்களைத் தன் பக்கம் இழுத்துவந்த அந்த இளைஞன் மாண்டதையடுத்து அந்த மாநிலத்தில் போராட்டங்கள் அதிகரித்து இரண்டு மாத காலத்தில் ஏறக்குறைய 100 பேர் மடிந்தனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் குடிமக்கள். இந்தச் சூழலில்தான் இந்த மாதம் 18ஆம் தேதி காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புக் கோட்டுக்கு அருகே உரி என்ற பகுதியில் உள்ள இந்திய ராணுவப் படைப்பிரிவின் நிர்வாகத் தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 18 இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றனர். 20க்கும் அதிகமான வீரர்கள் காயம் அடைந்தனர். ஒன்பது மாதங்களில் ஜம்மு -காஷ்மீர் இந்திய ராணுவ முகாம்களில் நடத்தப்பட்டிருக்கும் ஆறாவது பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இது. காஷ்மீரிலும் இந்தியாவிலும் அரங்கேற்றப்படும் எல்லா பயங்கரவாதச் சம்பவங்களுக்கும் பக்கத்து நாடான பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா கூறிவருகிறது. இந்த உரி முகாம் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தளம் கொண்டுள்ள ஜெய்ஷ்ஏ-முகம்மது என்ற அமைப்புதான் பொறுப்பு என்று இந்தியா குற்றம் சாட்டியது.

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய கூட்டம் நடக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதைக் கருத்தில்கொண்ட இந்தியா, அங்கு இந்தப் பிரச்சினையை முன்வைத்து, பாகிஸ்தானை பயங் கரவாத நாடு என்று குறிப்பிட்டு, உலக அளவில் அதைத் தனிமைப்படுத்தும் ராஜதந்திரத்தை முடுக்கிவிட்டது. அதேநேரத்தில், இந்தியாவின் குற்றச்சாட்டை எல்லாம் மறுத்து, தெற்கு ஆசியாவில் அமைதிக்கு இடையூறாக இருப்பது காஷ்மீர் பிரச்சினைதான் என்றும் அது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல என்றும் அதற்குத் தீர்வு காண உலகம் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்திவரும் பாகிஸ்தானோ, காஷ்மீர் பிரச்சினையை உலகப் பிரச்சினையாக்க ஐநா கூட்டத்தில் முயன்றது.

தன் மண்ணில் அரங்கேற்றப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தானே காரணம் என்று நம்பும் இந்தியா, அந்நாட்டுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும், ‘ஒரு பல் போனதற்குப் பதில் பாகிஸ்தானின் தாடையையே பெயர்க்க வேண்டும்’ என்று குமுறுகிறது.

‘பாகிஸ்தானிடம் அதன் மொழியில்தான் பேச வேண் டும்’ என்று குஜராத் முதல்வராக இருந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்குப் புத்திமதி சொன்ன அதே மோடி இப்போது பிரதமராக இருக்கிறார். என்றாலும் போர் தொடுத்து பாகிஸ்தானை அடிக்காமல் கெட்டிக்காரத்தன மாக நரித் தந்திரத்துடன் இந்தியா கொடுக்கும் ராஜதந்திர அடிதான் பயங்கரவாதப் பிரச்சினை ஒடுங்க உதவக் கூடும் என்றே தெரிகிறது.