பொருளியல் யானையும் பொருத்தமான பாகனும்

உலகில் தன்னைப்பேணித்தனம், உள் கண்ணோட்டம், சோஷலிசக் கொள்கைகள் போன்றவற்றைக் கடைப் பிடித்து உலகப் பொருளியலுடன் ஒட்டி, உறவு கொள்ளா மல் இருந்து வந்த நாடுகளில் பலவும் கால ஓட்டத்தில் பின் தங்கிவிட்டன. இத்தகைய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேவேளையில், உலகமயத்தைத் தழுவி, உலகுக் குத் தன் கதவுகளை அகலத் திறந்துவிட்டு, சரியான கொள்கைகளை வகுத்து, அவற்றைச் செம்மையாக அமலாக்கி, வெளிக் கண்ணோட்டத்துடன் திகழ்ந்து, பல துறைகளிலும் பல நாடுகளோடும் ஒத்துழைத்து, தாராள வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொண்டு செயல்பட்ட நாடுகள் பலவும் இன்று பொருளியலில் வளர்ந்த நாடுகளாக, வழிகாட்டும் நாடுகளாகத் திகழ்கின்றன. இத்தகைய வளர்ந்த நாடுகளில், “உலக நாடுகள் எல்லாம் நாளை செய்யப்போவதை இன்றே செய்யும் ஒரு நாடாக” இருக்கிறது சிங்கப்பூர்.

நிலப்பரப்பில் இந்தியாவின் ஒரு நகரத்தின் அளவுக் குக்கூட இல்லை என்றாலும் இந்தியாவுடன் அணுக்க மான உறவைக் கட்டிக்காக்க பலதுறைகளில் ஒத்து செயல்பட்டு பரஸ்பரம் நன்மை காண விரும்பும் முதல் நாடாக சிங்கப்பூர் திகழ்ந்தது, திகழ்கிறது. இந்தியாவின் பொருளியல் யானை பலம் வாய்ந்தது என்பதைக் கணக்கிட்டு அந்த யானையை உசுப்பிவிட்டு உலக அரங்கில் அதை கம்பீரமாக பீடுநடை போடவைக்க 1990களிலேயே ஊக்கமூட்டிய நாடு சிங்கப்பூர். சிங்கப் பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டோங், பிரதமர் என்ற முறையில் ஐந்து தடவை இந்தியாவுக்குச் சென்றார். “புதிய ஆசியா என்ற ஜம்போ ஜெட் விமானம் பறக்கத் தொடங்கிவிட்டது. அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்று இந்தியா, மற்றொன்று சீனா,” என்று குறிப்பிட்டு அந்த விமானம் வேகமாகப் பறக்க பலவழிகளை சிங்கப்பூர் சார்பாக யோசனையாக முன் வைத்தார்.

சிங்கப்பூரின் முயற்சிகளுக்கு இந்தியா செவிசாய்த்த தன் பலனாக தாராள பரந்த பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு ஏற்பட்டது. பலதுறைகளிலும் இரு நாடுகளும் முன்னேறின. கடந்த 2000த்தாவது ஆண்டு முதல் 2016 வரையில் இந்தியாவுக்குச் சென்ற நேரடி வெளி நாட்டு முதலீடுகளில் 16% சிங்கப்பூரைச் சேர்ந்தவை. சிங்கப்பூரில் ஏறக்குறைய 8,000 இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன. கிடுகிடுவென வளர்ந்த இரு தரப்பு உறவை இன்னும் உச்சத்துக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து இடம்பெற்ற முயற்சிகளின் விளைவாக சிங்கப்பூர் இந்தியாவின் அணுக்க நண்பராகியது. இந்தியாவில் சிங்கப்பூரின் நம்பிக்கை பலப்பட்டது. இந்த நம்பிக்கை நட்பை எடுப்பாக பறைசாற்றி உறவையும் ஒத்துழைப்பையும் இன்னும் வலுவாக்கும் வகையில் அண்மையில் இந்தியப் பயணம் மேற்கொண்ட பிரதமர் லீ சியன் லூங், இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் சிங்கப்பூர் தொடர்ந்து பங்காற்றும் என்று உறுதி கூறி இருக்கிறார். உடன்பாடுகளும் கையெழுத்தாகி இருக்கின்றன.

இந்தியாவில் இளையர்கள் அதிகம். ஆனால் பொருளியலுக்குத் தேவைப்படும் தேர்ச்சி அவர்களி டம் குறைவு என்பதைக் கருத்தில் கொண்ட அந்த நாடு, வரும் 2022 வாக்கில் 400 மில்லியன் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இதில் தன் அனுபவத்தை, ஆற்றலைக் கொட்டி சிங்கப் பூர் இந்தியாவுக்கு உதவ இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நூற்றுக்கணக்கில் விவேக நகர்களை உருவாக்க வேண்டும் என்பது அந்த நாட்டு புதிய அரசின் திட்டம். இதிலும் சிங்கப்பூர் தீவிர ஈடுபாடு கொள்கிறது. இந்தியா வளர கிளம்பிவிட்ட நாடு. இதில் வேகம் கிளம்பவேண்டுமென்றால் அந்த நாடு குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு இடையூறாக இருக்கும் தடைகளை அகற்றவேண்டும் என்று பிரதமர் லீ வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

“இந்தியர்கள் தங்களை, தங்கள் பொருளியலை யானை போன்று கருதுவார்கள். யானை எப்போதுமே படுவேகமாக நடக்காது. ஆனால் அதன் நடையைத் தடுக்க முடியாது” என்று தன் இந்தியப் பயணத்தின் போது பிரதமர் லீ குறிப்பிட்டார். இந்தியப் பொருளியல் என்ற யானைக்குப் பொருத்தமான பாகன் போன்று சிங்கப்பூர் முன்வைக்கும் யோசனைகளுக்கு இந்தியா செவிசாய்க்கும், பரஸ்பர நன்மைக்கு கதவை அகலத் திறக்கும் என்பதே எதிர்பார்ப்பு, நம்பிக்கை.