மின்சாரம் இல்லை, விளக்கு எரிகிறது

இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் வாழ்கின்ற, உலகக் கண்ணோட்டம் அதிகம் உள்ள, முன்னேறிய மாநில மாகத் திகழ்கின்ற தென்கோடி தமிழ்நாட்டு மக்கள், மக்களாட்சி தத்துவத்தின் மூலம் வாக்களித்து தேர்ந்து எடுத்து தாங்கள் ஆட்சியில் அமர்த்திய தங்கள் முதல மைச்சருக்கு என்ன ஆயிற்று என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாத சூழலில் இருக்கிறார்கள்.

அதிமுக என்ற மாநிலக் கட்சிக்கு கடந்த 1980கள் முதல் தலைமை ஏற்று அரசியலில் படுதோல்வியையும் பல வெற்றிகளையும் பார்த்து வந்துள்ள 68 வயது முதல்வர் ஜெயராம் ஜெயலலிதா, செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அடைபட்டு இருக்கிறார்.

நாட்டின் பெரும்பெரும் அரசியல் தலைவர்கள், சமய, சமூகத் தலைவர்கள் பலரும் அன்றாடம் மருத்துவமனைக் குச் சென்றுவந்தாலும் யாருமே முதல்வரைப் பார்க்க வில்லை. எதையும் பேசவில்லை. அங்கு என்ன நடக் கிறது என்பதோ முதல்வருக்கு என்ன ஆயிற்று என்பதோ யாருக்கும் முழுமையாகத் தெரிந்ததாகவும் தெரியவில்லை.

முதலமைச்சர் உடல்நலன் பற்றி தெரிந்துகொள்ள வழிசெய்யுமாறு கேட்டு நீதிமன்றத்தை அணுகியபோது சட்டமும் கதவை அடைத்துக்கொண்டது. தாக்கலான மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் முதல்வரைப் பார்வையிட சென்னைக்கு வந்துவிட்டுச் சென்றதை அடுத்து, தமிழக நிர்வாகத்தில் தலையிடப்போவதில்லை என்று மத்திய அரசும் பிரகடனப்படுத்திவிட்டது.

இதற்கிடையே, ஒரு மாநிலத்தின் முதல்வரை, அமைச்சர்களை, அரசுப் பணியாற்றும் அரசாங்க ஊழியர்களாகக் கருதலாமா என்பதைப் பற்றிய ஒரு விசாரணையை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்த மாதம் 24ஆம் தேதி நடத்த இருக்கிறது.

இந்த நிலையில், ‘தமிழ்நாட்டின் முதலமைச்சர் இன்னமும் நான்தான். ஆனால் என் வேலைகளை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார்’ என்று தன் பணிகளை, பொறுப்புகளை முதல்வர் கைமாற்றிவிட்டு விட்டார் என்று மாநிலத்தைக் கண்காணிக்கும் புதிய ஆளுநர் ராவ் அறிவித்துவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு, அவர் முதல்வர் பதவியில் இருக்கும்போது நடுவில் கொஞ்ச காலத்துக்கு அந்தப் பதவியைக் கைவிடவேண்டிய இடையூறுகள் வந்தது உண்டு. சட்டத்தின் பிடியில் சிக்கி அவர் சிறைக்குச் சென்றதுண்டு. ஆனால் இப்போது அவர் எதிர்நோக்கும் சூழல் வேறுபட்டதாகத் தெரிகிறது.

மாநிலத்தில் இதற்கு முன்னதாக அதிமுக தலைவர் எம்ஜி ராமச்சந்திரன் 80களில் முதல்வராக இருந்தபோது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் திமுக தலைவர் கருணாநிதி முன்பு முதல்வர் பதவி வகித்தபோது மருத்துவமனையில் 40 நாட்கள் இருந்தபோதும் மாநில நிர்வாகத்தின் மீது மக்களுக்குச் சந்தேகமோ ஐயமோ ஏற்படவில்லை. அப்போதெல்லாம் மாற்று ஏற்பாடுகள் இருந்தன. சட்டம் ஒழுங்கு அமலில் இருக்கிறது என்று மக்களும் அடுத்த மாதம் ஒழுங்காகச் சம்பளம் வந்து விடும் என்று அரசாங்க ஊழியர்களும் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கையில் ஒரு வகை சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழல் மாநிலத்தில் மெல்லமெல்லத் தலையெடுப்பதாக பேச்சு அடிபடுகிறது. நிர்வாகம் யார் பொறுப்பில் இருக்கிறது என்பதை, நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள முடியாமல் இரும்புத்திரை விழுந்திருப் பதாக உணர முடிகிறது.

என்றாலும் மாநிலத்தில் அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், தலையில்லாமல் இருந்தாலும் வால் வரை எல்லாம் வழக்கம்போல்தான் நடந்துவருகின்றன. மின்சாரம் இல்லை என்றாலும் விளக்கு எரிகிறது. இருந்தாலும் இந்த நிலை எவ்வளவு நாட்களுக்கு என்றுதான் தெரியவில்லை. இந்திய அரசியலில் குறிப் பிடத்தக்க சக்தி என்றும் தமிழகத்தில் அம்மா என்றும் அழைக்கப்படும் முதல்வர் ஜெயலலிதா, முற்றிலும் குண மடைந்து விரைவில் பணிக்குத் திரும்பவேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பம்.

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற முழக்க வாசகத்தை தன் பொதுவாழ்வில் பறைசாற்றி வரும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு தொடரட்டும்.